SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம்.
இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று டிரெய்லரை வெளியிட்டனர்.
பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் கலையரசன் பேசியதாவது…
மெட்ராஸ் என் சொந்த ஊர், எப்போதுமே எனக்கு மெட்ராஸ் பிடிக்கும். மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் ஒரு பங்காக நானும் இருப்பது, மகிழ்ச்சி. நடிகர் ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். மிகச்சிறந்த படத்தைத் தந்துள்ளீர்கள், ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டம். இன்றைய நிலைமையில், தியேட்டர் ஓடிடி என பிசினஸ் பார்ப்பது, திரையரங்குக்குத் திரைப்படத்தைக் கொண்டு வருவது, மிகப் பெரிய படங்களுக்கே சிக்கலாக உள்ளது, அந்த வகையில் இந்த படத்திற்கு டிரெய்லருக்கு ஒரு விழா, டீசருக்கு ஒரு விழா, என மிக சிறப்பாக விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு நன்றிகள். என்னிடம் சிலர் என்ன தயாரிப்பாளர் நிறையப் பணம் வைத்திருக்கிறாரா? என்று கேட்டனர். இல்லை நல்ல மனது வைத்திருக்கிறார் என்று சொன்னேன். என்னுடன் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவைத் தந்துள்ளார். என்னுடைய அடுத்த படத்திற்கும் சாம் சி எஸ் தான் இசையமைப்பாளர். சாம் சி எஸ் இசை எப்போதும் நம்முடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், அவருக்கு என் நன்றி. இந்த படத்தில் என் கதாபாத்திரமே மிக வித்தியாசமாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களை மகிழ்விக்கும் படைப்பாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நிறையத் திரைப்படங்கள் வருகிறது, ஒரு பெரிய படம் வரவில்லை என்றவுடன் இத்தனை திரைப்படங்கள் வருவது, நல்ல விஷயம் தான், ஆனால் இது நார்மலாகவே நடந்தால் நன்றாக இருக்கும். ஒரு பண்டிகையின் போது, முன்பெல்லாம் பல திரைப்படங்கள் வெளியாகும் நிலை இருந்தது, அந்த நிலை மீண்டும் வரவேண்டும். அனைவருக்கும் நன்றி