ஒரு இயக்குநராகவும் திரை எழுத்தாளராகவும் முத்திரை பதிப்பதை லட்சியமாகக் கொண்ட ஆர் ஜே சாய், முதற்கட்டமாக இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதையடுத்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து பயணிக்கவுள்ளார்.
ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகவுள்ள இப்படங்களுக்கு ‘பிரெய்ன்’ மற்றும் ‘ஷாம் தூம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளன. ‘பிரெய்ன்’ திரைப்படத்தை ‘தாதா 87’, ‘பவுடர் ‘, மற்றும் ‘ஹரா’ புகழ் விஜய்ஶ்ரீ ஜி இயக்க, ‘ஷாம் தூம்’ படத்தை நவீன் குமார் இயக்குகிறார். ‘ஷாம் தூம்’ படத்தின் கதை, திரைக்கதையை ஆர் ஜே சாய் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய ஆர் ஜே சாய், “கனடாவில் வாழ்ந்து வரும் போதிலும் தமிழ் திரையுலகில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். எனவே, ‘பிரெய்ன்’ மற்றும் ‘ஷாம் தூம்’ படங்கள் வாயிலாக எனது பயணத்தை தொடங்குகிறேன். உலகத் தரத்தில் இப்படங்கள் உருவாகவுள்ளன. கதையம்சம் மிக்க படங்களையும், திறமை கொண்ட இளைஞர்களையும் ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் தொடர்ந்து ஊக்குவிக்கும். எனது பிறந்த நாளன்று பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் வாழ்த்துகளோடு இந்த அறிவிப்பை வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி,” என்றார்.
ஆர் ஜே சாய் தயாரிப்பில் விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் ‘பிரெய்ன்’, நவீன் குமார் இயக்கும் ‘ஷாம் தூம்’ ஆகிய இரண்டு படங்களும் விரைவில் தொடங்கி 2026ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளன. பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படங்களில் பணியாற்ற உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக விரைவில் வெளியாகும்.