ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.
இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,
‘காளிதாஸ்’ எனக்கு மிகவும் பிடித்த படம். அது எல்லோருக்குமே ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. அதனால், ‘காளிதாஸ் 2’ வரும்போதும் நிச்சயம் அதே மாதிரி ஒரு ஆச்சரியம் நமக்கு காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு திரில்லர் படத்தில் பரத் சாருடன் இணைந்து அஜய் கார்த்திக் வருவது இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இன்று ஃபைவ் ஸ்டார் செந்தில் சார், விநியோகத் துறையில் ஆரம்பித்து, அவர் கை வைத்த படங்கள் ஊடகங்களில் பேசப்படும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ‘ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் டிஸ்ட்ரிப்யூட் பண்ணினால் அந்தப் படம் வெற்றி பெறும்’ என்ற நம்பிக்கையே இன்றைக்கு உருவாகி இருக்கிறது. மியூசிக் லேபிளாக இருந்தபோது வெற்றி கொடுத்தது போல, டிஸ்ட்ரிப்யூஷனிலும் தொடர்ந்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது அடுத்த கட்டமாக, தனது மகனை அறிமுகப்படுத்துகிறார். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஃபைவ் ஸ்டார் அமைப்பில் உள்ள மூன்று முக்கியமான கூட்டாளிகளின் மகன்களும் சினிமாவில் வருகிறார்கள். கல்யாண் சாரின் மகன் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். செந்தில் சாரின் மகன் அஜய் கார்த்திக் வருகிறார். அதேபோல் நம்முடைய தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் கதிரேசன் சாரின் மகனும் வர இருக்கிறார். ஒருநாள் இந்த மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் வர வேண்டும். ‘ஃபைவ் ஸ்டார் குழு’ என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் உருவாக வேண்டும். அந்த ஆசை எனக்குள்ளது.
இன்றைக்கு தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இண்டஸ்ட்ரி சற்று சிரமமாக இருக்கிறது’ என்று சொல்லப்படும் நேரத்தில்கூட, கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் சினிமா மிக அழகாக வளர்ந்து வருகிறது. நல்ல உள்ளடக்கம் இருந்தால் போதும், ரசிகர்கள் அதை பெரிய அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமா ஸ்டார்களை மட்டும் நம்பி ஓடுவதில்லை; நல்ல கதைகளையும் நல்ல படைப்புகளையும் மக்கள் மனதார வரவேற்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. அந்த வரிசையில், இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். செந்தில் சாரின் டிஸ்ட்ரிப்யூஷனில் தொடர்ந்து வந்த வெற்றிகளைப் போலவே, இப்போது ஸ்கை பிக்சர்ஸ் மூலமும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். இந்தப் படம் ஐம்பது, நூறு கோடி வசூலைத் தொட்டு, மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் நன்றி. வணக்கம்.