ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது. ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.
ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ், எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், “இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது. கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.