ப்ளு ஸ்டார் படம் மக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ.அழகன் பணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது ப்ற்றி தமிழ் ஏ. அழகன் கூறியதாவது,
மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பேருந்து, அதில் இருக்கும் பயணிகளின் திக்…திக்…நிமிடங்களை ’O2’ படத்தில் காட்சிப்படுத்திய போது எனக்கு சவாலாக இருந்தது. ஆனால், ‘ப்ளூ ஸ்டார்’ படம் அதை விட சவால் நிறைந்ததாக இருந்தது. காரணம், ’O2’ படத்தில் லைட்டிங் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் அனைத்துமே ஓப்பன் லைட்டிங் என்பதால் அது என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்காது. படத்தில் வெயில் மிக முக்கிய பங்கு வகிப்பதால், அந்த வெயிலை அனைத்து காட்சிகளிலும் கொண்டு வருவது சவலாக இருந்தது. முழு படமும் மூவ்மெண்ட்ல தான் இருக்கும். கேமராவை நான் கையில் வைத்துக்கொண்டு தான் காட்சிகளை படமாக்கினேன்.
இயக்குநர் ஜெயக்குமாரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவர் வாழ்ந்த அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சம்பவங்கள், அப்பகுதி இளைஞர்களின் காதல் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போன்றவற்றை மையமாக கொண்டு தான் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. அதனால், ஒரு வாழ்வியலை சொல்லும் படமாக இருப்பதால், படம் பார்ப்பவர்கள் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே படம் மக்களிடம் சென்றடையும் என்பதால், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது.
படத்தில் கிரிக்கெட் போட்டி மிக முக்கியமானதாக இருக்கும். அதிலும், தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டு போட்டி அல்லாமல், அரக்கோண பகுதியில் அந்த இளைஞர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டியை காட்சிப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுவார்கள், ஆனால் அவர்களுடைய போட்டி தொழில்முறை கிரிக்கெட் மற்றும் அதைச் சார்ந்தவையாக இருக்காது. மிக சாதாரணமாக இருக்கும், அதை சரியான முறையில் காட்சிப்படுத்த வேண்டும். படத்தின் முதல் பாதி முழுவதும் அப்படிப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் தான் இடம்பெறும். இரண்டாம் பாதியில் தான் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகள் நடக்கும், அந்தக் காட்சிகளை பாண்டிச்சேரியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் காட்சிப்படுத்தினோம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும், போட்டிகளில் இருக்கும் நுணுக்கங்கள் அவற்றுக்கு ஏற்றது போல் ஒளிப்பதிவு செய்திருக்கிறோம்.
இது ஒரு பீரியட் படம், 1990-களில் நடக்கும் கதை. 25 வருடங்களுக்கு பின்னால் செல்வதால், அந்த காலக்கட்டத்திற்கான விசயங்களை எடுத்து வந்திருக்கோம். அந்த காலக்கட்டத்தில், அந்த ஊரில் கிரிக்கெட் விளையாடியவர்கள் மட்டும் அல்ல, அதுபோல் இருக்கும் பல ஊர்களில் அப்போது கிரிக்கெட் விளையாடியவர்கள் தங்களை படத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காரணம், இவை அனைத்தும் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்பது தான். ஆனால், அப்படி ஒரு வாழ்க்கையை நான் பார்த்ததில்லை, இருந்தாலும் அதை உணர்ந்து படமாக்கினால் மட்டுமே அது சரியான முறையில் ரசிகர்களிடம் சென்றடையும். அப்படிப்பட்ட விசயங்கள் எனக்கு சவலாக இருந்தது. இப்போது படம் பார்த்து அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்
