சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், ”படக்குழுவினர் அனைவருக்கும் முதலில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இது முதல் படம். அதனால் தங்களது இந்த படைப்பை உயிரைக் கொடுத்து உருவாக்கி இருப்பார்கள். தயாரிப்பாளருக்கும் இது முதல் திரைப்படம் என்பதால் அவரும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் சலீம் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார். எனக்கு அவர் ஆட்டோ ஓட்டுநராகத்தான் அறிமுகமானார். அப்போதே சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை நேர்மையாக செய்தார். இவரது நேர்மை குறித்து பல செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியாகி இருக்கிறது.
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு, சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது முயற்சி எனக்கு வியப்பை அளித்தது. அவரிடம் யாராவது அரை மணி நேரம் பேசினால் போதும், அவரிடம் அவ்வளவு கதைகள் உள்ளன. வித்தியாசமான கதாபாத்திரங்களை பற்றியும், கதைக்கு தேவையான விஷயங்களை பற்றியும் விரிவாக சொல்வார்.
நடிகர் விதார்த்திற்கு நன்றி. அறிமுகமற்ற படைப்பாளிகளை கூட, அவர்களுடைய உணர்வுகளை மதித்து கதையைக் கேட்டு, மிக எளிமையாக பழகும் நபர் அவர். அதனால் அவருடன் இன்று வரை ஒரு நல்ல நட்பு தொடர்கிறது,” என்றார்.