பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், “நீண்ட நாள் கழித்து நண்பர்கள் தினத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிம்ரனை ‘நட்புக்காக’ படத்தில் பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் நடித்ததில் சந்தோஷம். ஜாலியான படப்பிடிப்பு அனுபவம். கண்டிப்பான இயக்குநர். படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் தியாகராஜன் வந்துவிட்டால், மகனாக இருந்தாலும் பிரசாந்த் அமைதி ஆகிவிடுவார். அவருடைய மனதில் பயபக்தி வந்துவிடும். இப்போதெல்லாம் யாரும் இயக்குநரைப் பார்த்து பயப்படுவதில்லை. இயக்குநர்கள் தான் பயப்படுகிறார்கள். இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு-ஊர்வசி ஆகியோருடன் இணைந்து நடித்த காட்சிகள் சிறப்பாக இருந்தன. ஆனால் ‘அந்தகன்’ சிறப்பு முன்னோட்டத்தில் இயக்குநர் தியாகராஜனின் தோற்றம் அனைவரையும் மிரட்டி விட்டது. சந்தோஷமாக தொடரும் இந்த அனுபவம் படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் தொடர வேண்டும் என விரும்புகிறேன். படத்தின் வெற்றி விழாவில் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.