KollywoodNow

Tamil CInema Updates

இளையராஜா இந்த படத்திற்கும் செய்திருக்கிறார் – சித்ரா லட்சுமணன்

E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசும்போது,

“இங்கே இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தவர்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ரசித்திருப்பீர்கள். ஆனால் ஒரு பானை சோற்றையும் ருசிக்கும் வாய்ப்பு சீமானுக்கும் கவிஞர் சினேகனுக்கும் எனக்கும் கிடைத்தது. ஒரு அறிமுக இயக்குநர் தனது படைப்பு இந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பதே அருமையான விஷயம். அதற்காக இயக்குநர் சிவபிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும். பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவர் என்பதால் இது குறித்து ஆச்சரியப்படவும் தேவையில்லை. சில சமயம் நாம் ஒரு கணக்கு போடுவோம்.. ஆனால் காலம் அந்த கணக்கை மாற்றும். காரணம் விஜித்தை தங்கர் பச்சான் தான் அறிமுகப்படுத்தவதாக படம் எடுத்தார். ஆனால் காலம் இந்த படத்தின் மூலமாக அவரை அறிமுகப்படுத்த வைத்திருக்கிறது. இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு புதுமுக நடிகருக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைவது என்பது பெரிய விஷயம். இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜித். முதல் படம் என்றாலும் இதில் கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. அதை அருமையாக கொடுத்திருக்கிறார் விஜித். எப்படி மண்வாசனை படத்தில் ஒரு வளையல் கடையில் வேலை பார்த்த பாண்டியனை துணிந்து பாரதிராஜா அறிமுகப்படுத்தினாலும் அந்த கதாபாத்திரத்தின் மூலமாக மக்களிடம் மனதில் ஒட்டிக் கொண்டார் பாண்டியன். அதன் பிறகு 85 படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதேபோன்று ஒரு அறிமுகத்தை தான் இந்த படத்தில் இயக்குநர் சிவப்பிரகாஷ் விஜித்திற்கு கொடுத்துள்ளார். காலம் காலமாக ஒவ்வொரு படத்திற்கும் இளையராஜா எப்படி தனது இசையால் உயிரூட்டுவாரோ அதேபோல இந்த படத்திற்கும் செய்திருக்கிறார். இந்த படம் நிறைவாகவே வந்திருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *