KollywoodNow

Tamil CInema Updates

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில், ” சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. அவருடைய படங்களில் இருக்கும் எனர்ஜி எனக்கு மிகவும் பிடிக்கும்.‌ அவர் இயக்குவது போன்ற படங்களை இயக்க வேண்டும் என்றால் எனக்கு இன்னும் சில ஆண்டுகாலம் ஆகும் என நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமாக திகழ்ந்த என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக்கு நன்றி. 2017 ஆம் ஆண்டின் சினிமாவில் உதவிய இயக்குநராக சேர்வதற்கு முயற்சி செய்தேன். அந்த தருணத்தில் நானும், தயாரிப்பாளர் யுவராஜும் இணைந்து குறும்படத்தினை உருவாக்கினோம். அன்றிலிருந்து இன்று வரை அவருடனான நட்பு தொடர்கிறது.‌ இயக்குநர்கள் ஆனந்த் சங்கர், ரா. கார்த்திக் ஆகியோருடன் பணியாற்றியிருக்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரான ஸ்வேதா ஸ்ரீ என்னுடைய நண்பர் தான். அவருடைய வீட்டிற்கு ஒரு முறை சென்ற போது உணவருந்தி கொண்டே படத்தைப் பற்றிய விசயங்களை பேசினேன். நானே தயாரிக்கிறேன் என அவரே ஆர்வத்துடன் முன் வந்தார். இந்தப் படத்திற்கு என்ன பட்ஜெட் என்று அவர் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்டது எல்லாம் கிடைத்தது. சுதந்திரமாக இந்த படத்தினை உருவாக்கி இருக்கிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்திற்கு விக்ரம் பிரபு தான் நாயகன் என தீர்மானித்து விட்டேன். ஆனால் என்னுடைய நண்பர்கள்தான் அவர் ஆக்சன் ஹீரோ! இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பாரா? என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அப்போதுதான் அவருடைய நடிப்பில் ‘இறுகப்பற்று ‘என்ற படம் வெளியானது. அதில் அவருடைய நடிப்பில் வேறு ஒரு பரிமாணம் வெளிப்பட்டது. இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தேன்.
அவர் நடிக்க சம்மதம் தெரிவித்த உடன் இப்படத்தின் பணிகள் வேகம் எடுத்தது. படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எந்த கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. என் மீது முழு நம்பிக்கை வைத்தார். தற்போது இந்த படத்தை பார்த்த பிறகும் என் மீதான நம்பிக்கை விலகவில்லை என நம்புகிறேன்.‌ இவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையப்பாளர் ஷான் ரோல்டனை சந்தித்த போதும் விக்ரம் பிரபுவிடம் சொன்னது போல் எனக்கு கதை சொல்ல தெரியாது. திரைக்கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றேன். அதன் பிறகு அவரிடம் ஒன்றரை மணி நேரம் கதையை சொன்னேன். அவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் பணியாற்ற தொடங்கினார். அந்தத் தருணத்தில் விக்ரம் பிரபுவுக்கு சிறந்த ஆல்பம் ஒன்றை இந்த முறை நான் தருவேன் என்று என்னிடம் சொன்னார். அந்த வகையில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை தொடர்ந்து பாடலாசிரியர் மோகன் ராஜன், நடிகர் ரமேஷ் திலக் , விநியோகஸ்தர் சக்தி வேலன், அருள் தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு, சுஷ்மிதா பட் ஆகிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். கல்யாணம் ஆகாத அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்யாணத்திற்காக காத்திருக்கின்ற எல்லா ஆண்களும், பெண்களும் இந்த படத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *