KollywoodNow

Tamil CInema Updates

சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு மனதைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
இயக்குநர் ஸ்ரீகணேஷ், “மீடியா மக்கள் நல்லபடியாக படம் பற்றி எழுதி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு நன்றி. என்னுடைய இரண்டாவது படம் சரியாக எடுக்க முடியாமல் போனது. ஆனால், மூன்றாவது படத்தை நன்றாக உழைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வார்த்தையை ‘3BHK’ திரைப்படம் காப்பாற்றி கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எமோஷனல், ஃபேமிலி ஸ்டோரி எடுத்தால் நிச்சயம் குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பார்கள் என்று நம்பினோம். அது இப்போது நடந்து வருகிறது. இது எங்களுடைய கதை என படம் பார்ப்பவர்கள் சொல்வதை கேட்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. படத்திற்கு வாய்ஸ் ஓவர் செய்து கொடுத்த கார்த்தி சாருக்கு நன்றி. எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் சிறுகதையில் இருந்துதான் இந்தப் படம் தோன்றியது. மேக்கப் ஆர்டிஸ்ட் சிவா சார் மற்றும் விஎஃப்எக்ஸ் குழுவினருக்கு நன்றி. கடினமாக உழைத்த படக்குழுவினர், தொழில்நுட்பக் குழுவினர், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை படம் பார்த்துவிட்டு தன்னுடைய முழு ஆதரவையும் நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்தார். அவர் எனக்கு அண்ணன் போலதான். அதேபோல, படத்தின் முதல் காட்சியை தொடங்கி வைத்த இயக்குநர் ராம் அவர்களுக்கும் நன்றி”.

தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “மொத்த அணிக்குமே இந்த மேடை எமோஷனல் தருணம். ஒவ்வொரு நாளும் திரையரங்குகளில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சினிமாவில் ஜெயிப்பது முக்கியம் என்றால், வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட முக்கியம். சினிமாவில் நல்ல நண்பர்கள் சம்பாதித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தை எத்தனை நாட்கள் தியேட்டரில் ஓட வைக்க முடியுமோ அதை என் தரப்பில் இருந்து நிச்சயம் நான் செய்வேன். படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம். மீதா கதாநாயகியாக நடித்துவிட்டு இப்போது தங்கை கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். அதற்கான பலன் கிடைக்கும். அதேபோல, சைத்ராவுக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. சாந்தி எனப் பெயர் வைத்ததுமே தேவயாணி மேம் எனக்குள் பர்சனலாக கனெக்ட் ஆகிவிட்டார். சரத் சார் பார்வையாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் எல்லாமே எங்கள் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன். கதையைக் கேட்டதுமே வேறு எது பற்றியும் யோசிக்காமல் சித்தார்த் ஒத்துக் கொண்டார். சீக்கிரம் அவரும் இயக்குநராவார். இந்தப் படத்திற்கு சிவகார்த்திகேயன் அண்ணன் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ராம் சாரின் ‘பறந்து போ’ படமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இரண்டு படங்களையும் குடும்பமாக வந்து பார்த்த, பார்க்க இருக்கும் பார்வையாளர்களுக்கு நன்றி” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *