நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் & நடிகர் மகேஸ்வரன் தேவதாஸ் பேசுகையில், ”ஒன்பது வயதில் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னுடைய இந்த விருப்பத்தை என் ஆசிரியரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு அறிவுரை வழங்கினார்.
நான் கமல்ஹாசனின் ரசிகன் நான். 11 வயதில் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை தேர்வு நேரத்திலும் பார்த்தேன். ஆசிரியர் நடிப்பின் மீது கவனம் செலுத்தாதே என்று அறிவுரை சொன்னாலும் என் மனதில் அந்த ஆசை பதிந்திருந்தது. .
அதன் பிறகு திருமணம் ஆனது. பிள்ளைகளும் பிறந்தார்கள். பிசினஸ் இருந்தது. கோவிட் வந்தது. அனைவரும் நெட்பிளிக்ஸ், அமேசான் என டிஜிட்டல் தளங்களில் தங்களது பொழுதை கழித்தனர். அந்த தருணத்தில் எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்கத் தொடங்கினர். சிங்கப்பூரில் என்ன சிறப்பு என்றால், டாப் 10 என திரைப்படங்களை பட்டியலிடுவார்கள். அங்கு சீனர்கள், மலாய்காரர்கள் என அனைவரும் படங்களை பார்ப்பார்கள். இதில் டாப் 1, 2 ஆகிய இடங்களில் தமிழ் படங்கள் தான் இருக்கும். எல்லோருக்கும் தமிழ் படங்களை பார்க்கத்தான் ஆசை. இதை நான் உன்னிப்பாக கவனித்தேன். அதன் பிறகு என்னை தயார்படுத்திக் கொண்டு 46 வயதில் சிங்கப்பூரில் கட்டுமஸ்தான தேசிய ஆணழகன் என்ற பட்டத்தை வென்றேன். அதன் பிறகு இந்த உடலமைப்பை எப்படி எங்கு வெளிப்படுத்திக் கொள்வது என யோசித்தேன். எனக்கு வில்லன்களை மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வில்லன்கள் தான் முதுகெலும்பு போல் இருப்பார்கள். நான் பேட்மேன் படத்தை பார்த்துவிட்டு வில்லனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை நான் கில்லி, துப்பாக்கி, தனி ஒருவன் போன்ற படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பேன். விஜய்க்காக மட்டுமல்ல அந்தப் படத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், ஹிந்தி வில்லன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பிற்காக அந்தப் படங்களை பார்ப்பேன்.
எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது. இதற்காக இரண்டு ஆண்டுகள் ஹோம் ஒர்க் செய்தேன். தமிழ் திரையுலகில் எத்தனை துறைகள் இருக்கின்றன, அவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்து ஹோம் ஒர்க் செய்தேன். இதில் என்னை ஏமாற்றுவதற்கும் சிலர் முயற்சித்தனர். அதன் பிறகு தான் அஷ்ரஃப் அறிமுகமானார். அங்கிருந்து இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு இரண்டு ஆண்டுகளானது.
எனக்கு சிங்கப்பூரில் தொழில் இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் சர்வதேச அளவிலான மேடைப் பேச்சாளர், எழுத்தாளர். கால்பந்து பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறேன். இத்தனை பணிகளையும் நிர்வகித்துக் கொண்டே இடையில் இந்த படத்தின் பணிகளை கவனித்தேன்.
சரியாக திட்டமிட்டு பணியாற்றினால் நல்ல படத்தை வழங்க இயலும் என்பதில் உறுதியாக இருந்தேன். கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்.
என்னுடைய தாத்தாவின் பெயரில்தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். ஆபாச காட்சிகள் இடம் பெறக் கூடாது, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்ற இரண்டு நோக்கத்தை மனதில் வைத்து தான் என் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும், குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரையரங்க அனுபவத்தையும் பெற வேண்டும் என்பதற்காக படங்களை தயாரிக்க திட்டமிட்டேன். இதைத்தான் இயக்குநர் அஷ்ரஃப்பிடம் தெளிவாக தெரிவித்தேன். கதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இப்படத்தின் டீசர் என்ன, ட்ரெய்லர் என்ன என்பது வரை விவாதித்தோம். அதனால் தான் அவரை முதலில் ஒரு குறும்படத்தை இயக்கச் சொன்னேன்.
இந்தப் படத்தில் முக்கியமான சோஷியல் மெசேஜ் இருக்கிறது. இதனை கிரைம் திரில்லர் ஜானரில் சொல்ல முடியும் என்பதை முதன்முதலாக முயற்சித்து இருக்கிறோம். அந்த வகையில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் 2023ம் ஆண்டு டிசம்பரில் நிறைவு செய்தோம். அதன் பிறகு இப்படத்தினை நேர்த்தியாக செதுக்குவதற்கு ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டோம். ஏனெனில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
படத்தின் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று வெளியாகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.