மிராய் – விமர்சனம்
சிறிய வயதில் படித்த வரலாற்றுப் பாடங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களை திரையில் காணும் ஒரு பரவச அனுபவம்தான் இந்த படம்.
கலிங்கத்து போருக்குப் பின் பேரரசன் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீய சக்திகள் இந்த 9 புத்தகங்களை கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார். மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் ஒன்றின் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா களத்தில் இறங்குகிறார். இந்த வரலாற்றுக் கதையை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.
பிரபஞ்சத்தை அழிக்க நினைக்கும் மகாபீர் லாமா என்ற உறுதி மிக்க சக்திவாய்ந்த தோற்றத்துடன் வில்லனாக எதிரியாக மஞ்சு மனோஜ். அவரது உக்கிரமான கண்கள், கட்டளையிடும் கம்பீரமான குரல் மற்றும் அசாத்திய தைரியத்துடன் அனைத்தையும் செய்யும் செயல் திறன் என்று மிடுக்கான மகாபீர் லாமாவாக சரியான பொருத்தமாக அமைந்துள்ளார். மனோஜ் தோன்றும் ஒவ்வொரு காட்சியையும் தன்னுடைய இருப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
ஸ்ரேயா சரண் சக்தி வாய்ந்த பெண்மணியாக, தாயாக, ஒரு ஊரையே காக்கும் தெய்வ சக்தியாக தன்னுடைய ஆற்றலால் கவர்ந்திழுந்துள்ளார். அவர் படத்தின் முக்கிய புள்ளியாக இருந்து வழிநடத்துவதும், தன்னுடைய செயல்திறனால் கதைக்கு உணர்ச்சி ஆழத்தை சேர்த்து, மகனை முன்னோக்கி செல்ல வழி வகுத்து அழுத்தத்துடன் பங்களிப்பை கொடுத்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக், நாயகனின் இளம் வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு என அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இசை-கௌரா ஹரியின இசை, வேதங்களின் பின்னணி இசை பல காட்சிகளை மயிர்கூச்செரியும் அனுபவங்களாக மாற்றுகிறது. வித்தியாசமான ஒலி எழுப்பும் ஆயுதங்களை பயன்படுத்தும் சண்டை காட்சிகள் உலகத்தரம்.
வி.எஃப்.எக்ஸ் வியக்கத்தக்க வகையில் மெருகூட்டப்பட்டு குறிப்பாக பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் காட்சிப்படுத்தபட்ட விதம் அருமை.
கலை இயக்குனர் ஸ்ரீ நாகேந்திர தங்காளா அர்ப்பணிப்பு படத்தின் வெற்றிக்கு அச்சாணி.
படத்தொகுப்பு-ஸ்ரீகர் பிரசாத் மற்றும் கதை வசனம் எழுதியிருக்கும் மணிபாபு கரணம் மற்றும் கார்த்திக் கட்டம்னேனி பங்களிப்பு நவீனத்துத்துவத்துடன் புராணங்களை புத்திசாலித்தனமாக கலந்து படத்தின் அனைத்து காட்சிகளுக்கும் அளப்பரிய பணியை செய்து முடித்துள்ளனர்.
கார்த்திக் கட்டம்னேனி கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று பல தொழில்நுட்பங்களை நுணக்கமாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.படத்தின் முதல் பாதி கணிக்கக்கூடியதாக விறுவிறுப்பான திரைக்கதை இரண்டாவது பாதி மிகவும் வலுவானது, கணிக்க முடியாத திருப்பங்களுடன் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஒரு கற்பனை கலந்த புராண, நவீன கதைச்சொல்லலுடன் கண்கவர் காவியமாக திரையில் படைத்துள்ளார்.
மிராய் – மிரட்டல்