மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர்கள் ரவி, நவீன், “‘டியூட்’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கீர்த்தீஸ்வரன் ரொம்ப சென்சிபிளான விஷயத்தை சரியாக சொல்லியுள்ளார். பிரதீப், மமிதா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.
எடிட்டர் பரத் விக்ரமன், “உலகம் முழுவதும் ‘டியூட்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் கீர்த்திக்கு நன்றி. பிரதீப், மமிதா, சரத் சார், ரோகிணி மேம் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி. என்னுடைய டீமுக்கும் நன்றி!”.
நடிகை ஐஸ்வர்யா வர்மா, “படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களுடைய சம்யுக்தாவாக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கீர்த்தி சார். இந்த வருடம் எனக்கு நடந்த அழகான விஷயம் ‘டியூட்’. ‘லவ் டுடே’ படத்தில் இருந்து பிரதீப்பை ரொம்பவே பிடிக்கும். எனக்கும் இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்கு பிரதீப் தான் இன்ஸ்பிரேஷன்! ‘பிரேமலு’ பார்த்ததில் இருந்து மமிதாவுடன் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை இந்தப் படம் மூலம் நிறைவேறியது. என் அப்பா சரத் சாரின் மிகப்பெரிய ரசிகர். அவரது கனவை இந்தப் படத்தில் நிறைவேற்றி இருக்கிறேன். படத்திற்கு இவ்வளவு அன்பு கொடுத்துவரும் ரசிகர்களுக்கு நன்றி. ரொம்ப பாசிட்டிவ் வைப்போடு இருந்த ‘டியூட்’ செட்டை இப்போது மிஸ் செய்கிறேன். உங்களுடைய கனவை எப்போதும் கைவிடாதீர்கள்”.