எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். அவரது கதையில் எப்போதும் போல் இருக்கும் சுவாராஸ்யம் படத்தில் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் நல்ல க்ரைம் நாவல் படித்த உணர்வை கொடுக்கிறது.
ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக இருந்தாலும் அவர்களது கைவிரல் ரேகை வெவ்வேறாக இருக்கும். அப்படி இருக்க, ஒரே கைவிரல் ரேகை நான்கு பேருக்கு பொறுந்துகிறது. அப்படி இருக்க வாய்ப்பில்லையே, என்ற சந்தேகத்தில் அந்த ரேகை தொடர்பாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான நாயகன் பாலா ஹாசன், விசாரணை மேற்கொள்கிறார். சம்மந்தப்பட்ட நான்கு பேரும் இறந்த தகவல் கிடைக்கிறது. நான்கு பேரும் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவித்தாலும், பாலா ஹாசன் அதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருக்கிறது, என்பதை உணர்ந்து விசாரணையில் தீவிரம் காட்டும் போது, நான்கு பேரும் கொலை செய்யப்பட்டிருக்கும் உண்மை தெரிய வருகிறது.
எந்தவித தடயங்களும் இல்லாமல், குறிப்பாக பிரேத பரிசோதனையில் கூட எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் கொலை செய்யப்பட்டிருக்கும் இந்த நான்கு பேர் யார் ?, அவர்களை கொன்றது யார்? என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் எம்.தினகரன்.
கதையின் நாயகனாக காவல்துறை உதவிஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கும் பாலாஹசன்,அந்த வேடத்துக்குரிய மிடுக்கும் துடிப்பும் கொண்டிருக்கிறார்.வேகத்தோடு விவேகத்தையும் நடிப்பில் வெளிப்படுத்தி அந்த வேடத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
காவலராக நடித்திருக்கும் பவித்ராஜனனி கதையின் நாயகியாக இருக்கிறார்.ஏனெனில் அவர் நாயகனைக் காதலிக்கிறார்.காதல் கடமை ஆகியனவற்றிற்கேற்ப நடித்திருக்கிறார்.
வினோதினிக்கு முக்கிய வேடம்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.அவருடைய வேடம் தொடரின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம்.ஹெண்ட்ரி, திரைக்கதையில் இருக்கும் திடுக்கிடல்களைக் காட்சிகளிலும் காட்டி,நிஜ நிகழ்வுகளைப் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்திருக்கிறார்.
இதுபோன்ற புலன்விசாரணைக் கதைகளுக்கு பின்னணி இசை மிகமிக முக்கியம்.அது சரியாக அமைந்தால் காட்சிகளின் தன்மை பலம்பெறும். ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்பின் பின்னணி இசை அபாரம்.
பாக்கெட் நாவலாக படித்தும் டொடர்கதையாக படித்தும் பழக்கப்பட்ட வாசிப்பாளர்களுக்கு திரையில் பார்க்கும் அனுபவம் வித்தியாசமாக இருக்கும்.
ரேகை – திகில்