கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனும் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பெரும் வெற்றியை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட குழுவினருடன் மத்திய இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் என ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
*இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில்,*
”எனக்கு ஏழு வயதாக இருக்கும்போதே தந்தையை இழந்தேன். பிறக்கும் போதே பணக்காரராக பிறந்து.. பிறகு ஏழையாகி.. பிறகு மீண்டும் மீண்டும் ஏழையாகி, அதன் பிறகு பணக்காரனாகி இருக்கிறேன். இந்த வெற்றிக்கு எத்தனை முறை கேட்டாலும் இதைத்தான் சொல்வேன் உழைப்பு.. உழைப்பு… குடும்பம்.
நான் சிறிய வயதிலிருந்து நானும் நன்றாக இருக்க வேண்டும். என்னைச் சார்ந்த மற்றவர்களும் என்னைவிட நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். அதேபோல் தற்போது நான் இருக்கும் துபாயில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னுடைய எல்லா செயல்பாடுகளும் துபாயில் தான் உள்ளது. ஏனெனில் நான் இருந்த இடத்திற்கு… வளர்ந்த இடத்திற்கு… விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.
இந்த நிகழ்வு இந்தியாவில் இன்று.. இந்த தேதியில்.. நடப்பதற்கு என் ஊர் மக்கள் தான் காரணம். அத்துடன் நடிகர் ஜீவாவும் சென்னைக்கு வர வேண்டும் என்று பலமுறை கேட்டுக்கொண்டார். ஒவ்வொருவரையும் மறுத்து வந்த நான் இந்த முறை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவரை நான் நேரில் வந்து சந்தித்தேன்.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நான் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளேன். இந்த வருகையில் மகிழ்ச்சியை அள்ளித் தந்தது இந்தப் படத்தின் பணியாற்றிய அனைவரும் தான். ஜீவாவிற்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முதலில் எங்களுடைய குடும்ப நண்பராகத்தான் பழகத் தொடங்கினார்.
இது ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா என்பதை விட எங்களுடைய கண்ணன் ரவி குழுமத்தின் முத்திரையை பிரபலமாக்கிய வெற்றி விழாவாக பார்க்கிறேன். இதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் அவருடைய குடும்பம் நல்லவிதமாக அமைய வேண்டும். அது அமைந்தால் வெற்றி உறுதி. அந்த வகையில் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.