மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘வடம்’ படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனிஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் பேசுகையில்,
” நான் இந்த துறைக்கு புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னை சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டை பற்றி சொன்னார். அது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாக சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையை சொன்னாரோ… அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்தார்கள். குறிப்பாக இமான் அவர்களின் இசை சிறப்பாக இருந்தது. புது தயாரிப்பு நிறுவனம் புது தயாரிப்பாளர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள் தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ -காபி -பால் -தயிர்- என மாட்டுடன் நாம் அனைவரும் தொடர்பு கொண்டிருக்கிறோம். 18 ஆண்டு காலம் நமக்காக வாழ்ந்து இறக்கிறது. இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டை பற்றி படம் எடுப்பது பாக்கியம் என கருதுகிறோம்.
நிறைய பேர் வெள்ளித்திரையில் தோன்றுவதை தான் தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த விசயத்தை நாங்கள் சொன்னதால் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக இறைவனுக்கும், மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்” என்றார்.
நடிகர் விமல் பேசுகையில், ” இந்தப் படத்தை பார்த்து விட்டேன். இமான் சார் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ‘பாண்டி முனி’ பாடலை தான் ஒலிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த இமானுக்கு நன்றி.
எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும். ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்.
ஹீரோயின் பெயர் சனாஸ்கா. இந்தப் பெயரை கூப்பிடுவதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கிறது. அவர் இந்த படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
எனக்கு பால சரவணன் ஆகிய இருவருக்கும் மாடுடன் தான் பெரிய டாஸ்க் இருக்கும். அவர்கள் பெயர் பாண்டி முனி. அவர்கள் இன்று மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை.
படத்தில் நானும், நட்டி நடராஜும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது.. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாதே அடிக்க வேண்டும் என்றால் அடித்து விடு, மிதிக்க வேண்டும் என்றால் மிதித்து விடு என மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்த காட்சி அற்புதமாக வந்தது. அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளை பற்றி ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ரோபோ சங்கர் மாமா மறைந்த போது குற்றாலத்தில் ‘வடம்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். பெரிய பொருட்செலவில் அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரவு தான் எனக்கு தகவல் சொன்னார்கள். நான் மெதுவாக இயக்குநரிடம் சொன்னேன். படப்பிடிப்பிலிருந்து செல்வதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கேட்டு பார்ப்போம் என இயக்குநரிடம், இரவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்று காலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக விமானம் ஏறி மதியத்திற்குள் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.
ஆயிரம் துணை நடிகர்கள்- மக்கள்- மாடு பிடி வீரர்கள்- சிவகங்கையிலிருந்து ஏராளமான மாடுகளும் வந்து இருந்தது. கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன் இல்லை என்றார்கள். அதன் பிறகு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். மனைவியிடம்,’ நீ சென்று ஆறுதல் கூறு’ என்று சொல்லிவிட்டேன்.
அடுத்த நாள் மாலையில் அனைவரையும் அழைத்து ரோபோ சங்கருக்கு கண்ணீர் அஞ்சலியுடன் பெரிய ப்ளக்ஸ் பேனரை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள கிராம மக்களுக்கு 500 புடவைகளை தானமாக வழங்கினார். அந்த ஏரியா முழுவதும் 2000 மரக்கன்றுகளை வழங்கி, அதை பதியமிட வைத்தார். நேரில் வந்து செலுத்த முடியாத அஞ்சலியை தயாரிப்பாளர் ராஜசேகர் இப்படி செய்து என் மனதை கவர்ந்து விட்டார். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கதையை அவர் கவனமாக தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார். இந்த நிறுவனமும், இந்த படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் கேந்திரன் இந்த கதையை என்னிடம் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஆனால் அதை அவர் சொன்னபடியே எடுத்து விடுவாரா..! என்ற சந்தேகம் இருந்தது. இது ஒரு கமர்சியல் திரைப்படம் தான். ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம். அதுவும் நான்கு ஐந்து கதைகள் இருக்கும் படம். முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்லி சொல்லி கிளைமாக்ஸ்சில் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பார். படப்பிடிப்பில் நிறைய காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்பிக்கையே வரவில்லை. நேற்று முன்தினம் படம் பார்த்த பிறகு தான் எனக்கு திருப்தியானது. அவர் என்னிடம் சொன்ன கதையை கச்சிதமாக படமாக்கி இருந்தார். இந்த படத்தை இனி ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.