ஸ்டாண்ட் அப் காமெடியன்- பிக் பாஸ் பிரபலம் – டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் – ஜி . திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.
இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், ” இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ- ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.
2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன். நான் ஒரு அமைதியான கலைஞன். என்னை போல என் ரசிகர்களும் அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.