தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.
ஆக்ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல், ரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பயணம் மற்றும் எதிர்கால திட்டங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதிலளித்தார். அந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் இங்கே…
“நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த கருத்துக்கள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.
மேலும், தனது பெற்றோர்களும் படம் வெளியான பிறகு ஊடகங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆர்வமாகக் கேட்பார்கள் என்றும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய நேர்மறையான கருத்துகளை அவர்களிடம் பகிர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தனது புதிய படமான கான் சிட்டி குறித்து பேசிய அவர், “இது குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்,” என்றார்.
தனது கதாபாத்திரம் குறித்தும் அர்ஜுன் தாஸ் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். “இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான, நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது. கடன்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கைச் சவால்கள் என பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று அவர் கூறினார்.