விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியானது.
*கோயம்புத்தூர்:* இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பாரம்பரியம், புதுமை, ஆட்டோமொபைல் உலகம் மற்றும் சினிமா என அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வித்தியாசமான திரைப்பட புரோமோஷன்களில் ஒன்றாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
ஜி.டி. மியூசியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய விண்டேஜ் கார்களில் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வருகை தர நிகழ்ச்சி தொடங்கியது. ஜி.டி. நாயுடுவின் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த அணிவகுப்பு அமைந்திருந்தது. இதனுடன், நவீன சொகுசு அதிவேக கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜி.டி. நாயுடுவின் காலத்தைத் தாண்டிய கண்டுபிடிப்புகளையும், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் இணைக்கும் விதமாகவும் இது அமைந்தது.
மணிக்கு சுமார் 190 கிலோமீட்டர் வேகம் வரை சென்ற அதிநவீன சூப்பர் காரில் நடிகர் ஆர். மாதவன், முன்னணி ஊடகங்களின் பத்திரிகையாளர்களை கரி மோட்டார் ஸ்பீட்வேயை சுற்றி அழைத்துச் சென்றது நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அதிவேக பயணம், ஜி.டி. நாயுடுவின் ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் மீதான பேரார்வத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது. சூரியன் மறையும் மாலை நேரத்தில், சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டபோது, பார்வையாளர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் கொண்ட டிரைய்லர் பார்வையாளர்களின் உற்சாகத்துடன் அவர்களுக்கு திரையிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தின் நுணுக்கமான விவரங்கள் மற்றும் பிரம்மாண்டமான திரையனுபவத்துடன் கூடிய இந்த டிரெய்லர் ‘இந்தியாவின் எடிசன்’ என்று கொண்டாடப்பட்ட ஜி.டி. நாயுடுவின் விடாமுயற்சி, கண்டுபிடிப்பு ஆர்வம், தேசப்பற்று மற்றும் அவரது வரலாற்று சாதனைகளை கண்முன் காட்டியது. ஜி.டி. நாயுடுவாக ஆர். மாதவனின் தோற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், தந்தை பெரியார் மற்றும் அடால்ஃப் ஹிட்லர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அசாதாரண சாதனையாளர், அதைவிட மிக முக்கியமாக தேசபக்தி கொண்டவர். பல துறைகளில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆனால், அவரது ஆட்டோமொபைல் மீதான பேரார்வத்தை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியது அவசியம். அதுவே இந்த திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது” என்றார்.