சென்னை பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு, நீண்டகால ஒருதலை காதலை மிக எளிமையாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறது. பெரிய அளவிலான ட்விஸ்ட் இல்லாமலேயே, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் குடும்பச் சூழலையும் அழகாகப் பின்னிப் பிணைத்திருக்கும் இந்தப் படம், பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து, இறுதியில் இதமான உணர்வுடன் வெளியே அனுப்புகிறது.
பெரம்பூரில் வசிக்கும் இளைஞன் பாரி இளவழகன், அதே பகுதியில் வாழும் ஆங்கிலோ-இந்தியப் பெண் ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதலே மனதார காதலித்து வருகிறார். ரம்யா அவரது காதலை ஏற்க மறுத்தாலும், நல்ல நண்பராகவே அவருடன் பழகி வருகிறார். பல வருட காத்திருப்புக்குப் பிறகு ரம்யா சம்மதம் தெரிவிக்கும் தருணத்தில், திடீரென்று பாரி பின்வாங்குகிறார். இந்த தயக்கத்தின் பின்னணியில் என்ன இருக்கிறது? அவர்களின் காதல் எப்படி முடியும்? என்பதை இயல்பான நகைச்சுவை தொனியில் விவரிக்கிறது படம்.
நாயகனாக நடித்த பாரி இளவழகன், பக்கத்து வீட்டுப் பையன் போன்ற எளிமையான தோற்றத்துடன், மிகவும் இயற்கையான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். நீண்டகால காதல் கைகூடும் போது ஏற்படும் குழப்பங்கள், கண்டிப்பான அம்மாவின் முன் காதலைச் சொல்ல முடியாத தவிப்பு, உணர்வுகளை அடக்கி வைக்கும் மனநிலை போன்றவற்றை எந்தவித அலட்டலும் இல்லாமல் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகன் நாயகிக்கு இணையாக வலம்வருகிறார் ரோஜா.நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அவர் தமிழும் தெலுங்கும் கலந்த உரையாடல்களில் மட்டுமின்றி உடல்மொழியிலும் சூட்டிப்பு காட்டி வியக்க வைத்திருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தனின் வேடமும் அதற்கேற்ற அவர் நடிப்பும் அருமை.
வலையொளி புகழ் பரிதாபங்கள் கோபி,பெங்களூர் தமிழர் வேடத்தில் நடித்து படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்.சில காட்சிகளில் வரும் செல்முருகனும் சிரிக்க வைக்கிறார்.
நாயகனின் மாமா பெண் நிகிலா சங்கர்,நாயகனின் சகோதரி இஸ்மத் பானு,சகோதரனாக நடித்திருக்கும் பத்திரிகையாளர் சுதர்சன் காந்தி ஆகிய அனைவரும் படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் திரைக்கதை பலம்பெற வேண்டுமெனில் காட்சிகளும் கைகொடுத்தாக வேண்டும் என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட்.சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் மக்களே படத்தில் வரும் பெரம்பூரைப் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
படம் கலகலப்பாக நகர்வது நமக்கு பொழுது போக்காக அமைகிறது