மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன்.
‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இனறு நடைபெற்ற இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மோகனா பேசியதாவது..,
“என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க முடிகிறது. ஆனால் எல்லாரும் முன்னாடி நின்று பேசுவது என்றால் ரொம்பவே பதட்டமாகவும், நடுக்கமாகவும் இருக்கிறது. அதனால் மன்னித்துக்கொள்ளுங்கள். இங்கு இந்த விழாவிற்கு வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி.
நிஜமாகவே இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு, எங்களுக்கு நல்லபடியாக ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை பார்த்து எங்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்” நன்றி.
இயக்குநர் மைதீன் பேசியதாவது..,
இன்று இந்த விழாவிற்கு வருகை தந்த ஐயா ஆர் வி உதயகுமார், இயக்குநர் விக்ரமன், அண்ணன் மன்சூர் அலிகான் ஆகிய அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு சார் இப்படத்தில் சில நாட்கள் மட்டும் வேலை செய்து தந்தார். எங்களுக்கு சிக்கல் எழுந்த போது மூத்த ஆளுமையாக இருந்தும் சில நாட்கள் மட்டும் வேலை செய்து தந்தார் அவருக்கு என் மிகப்பெரிய நன்றிகள்.
உதவி இயக்குநர்களின் வலி அவர்களின் அடையாளம் சினிமாவில் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கான வாய்பு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கான அடையாளம் கிடைக்கும். பலர் இன்னும் அந்த வாய்பில்லாமல் இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் துஷ்யந்த் நடிக்க வைக்க அணுகியபோது, அவர் அப்பா தான் சொல்வார் என்றார். எனக்கு அப்போது ஜெயப்பிரகாஷ் சார் தான் அப்பா என்பது தெரியாது. ஜெயப்பிரகாஷ் சாரை சந்தித்து முழு கதையை சொன்னேன். அவர் ஒரு தயாரிப்பாளர், அவர்களின் வலி புரிந்து அக்கறையுடன் அறிவுரை சொல்வார் என நினைத்து முழு கதை சொன்னேன்.
கதை கேட்டு அழகர் கேரக்டர் யார் செய்கிறார்கள் என்று கேட்டார். நான் உங்களை கூட நினைத்திருந்தேன் ஆனால் சம்பளம் பெரிதாகிவிடும் என்றேன், ஆனால் சம்பளம் ஒரு விஷயமே இல்லை நான் நடிக்கிறேன் என்று வந்தார் அவர் மனதுக்கு என் பெரிய நன்றி.
ஜேம்ஸ் வசந்தன் சாரிடமும் அப்படித்தான் தயங்கி தான் சென்றேன் கதை பிடித்தால் தான் சொல்வேன் என்றார், கதை படித்துவிட்டு இதை அப்படியே எடுத்து விடுவீர்களா? என்றார். நான் கண்டிப்பாக எடுப்பேன் என்றேன் அப்படி என்றால் நான் கண்டிப்பாக இசை அமைக்கிறேன் என்று சொன்னார். அவருக்கு என் நன்றிகள்.
இம்மாதிரியான ஆளுமைகள், உதவிகளால் தான் இப்படம் சாத்தியமானது. நம் தேடலை எப்போதும் நிறுத்தக்கூடாது. என் தயாரிப்பாளர் மோகனா மேடம் அவர்களுக்கு பெரிய நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும். இப்படத்தில் உழைத்த நடிகர் நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.