ராமேஸ்வரம் கடற்கரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், எளிய மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சிக்கல்களைச் சொல்கிறது.
கருணாஸ் தவசி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் திதி கொடுக்கும்போது வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் சென்று சேகரித்து, அதன் மூலம் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.
ஒருநாள் கடலில் சில்லறைக் காசுகளைத் தேடும்போது, தவசிக்கு விலை உயர்ந்த தங்க ஆபரணம் ஒன்று கிடைக்கிறது.
கிடைத்த பொருளை நேர்மையாகக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்.
ஆனால் அதன்பிறகு அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. அவர் செய்யாத தவறுக்காகச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
தவசி எதிர்கொள்ளும் பிரச்சினை, காவல்துறை மற்றும் நீதிமன்றத்தைச் சுற்றி நகர்கிறது.
நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடிக்கிறார். அவர் தவசிக்காக சட்டப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
எனப் பல கேள்விகளைப் படம் முன்வைக்கிறது.
“அன்பு, பாசம், தியாகம், சுயமரியாதை போன்றவற்றிற்கு என்ன விலை?”
இயக்குநர் சஜீவ் பழூர், இந்தக் கேள்வியை மையமாக வைத்து படத்தை உருவாக்கியுள்ளார்.
ராமேஸ்வரம் கடலில் காசுகளைச் சேகரித்து வாழும் ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைக்கும் விலை உயர்ந்த ஆபரணம், அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய சட்டச் சிக்கலை ஏற்படுத்துகிறது. அந்தச் சிக்கலில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே ‘என்ன விலை’ திரைப்படத்தின் கதை.
கருணாஸ், தவசிமுத்து கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.
கடலுக்குள் மூழ்கி நாணயங்களைச் சேகரிக்கும் தொழிலாளியாக மட்டுமல்லாமல், அநியாயமாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சாமானிய மனிதனின் வலியையும் தவிப்பையும் தனது நடிப்பில் கடத்துகிறார். அவரது அப்பாவித்தனமும், தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் காட்சிகளும் மனதில் நிற்கின்றன.
நிமிஷா சஜயன், வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். நீதிமன்றக் காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பும், வாதிடும் பாங்கும் கவனம் ஈர்க்கின்றன. கருணாஸின் கதாபாத்திரத்திற்கு ஆதரவாக நிற்கும் ஒரு சட்டப் போராளியாக அவரது பங்களிப்பு அமைந்துள்ளது.
இருவரின் நடிப்பும் படத்தின் மையக் கருத்தான சாமானிய மனிதனின் தன்மானப் போராட்டத்திற்கு வலு சேர்க்கிறது.
கதைநாயகனின் தொழிற்களமான கடல், ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி தன் திறமையை நிரூபிக்க நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது. சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். தங்கப்பதக்கத்தின் பின்னால் பயணிக்கும் திரைக்கதையும் ஒளிப்பதிவாளருக்கு மகிழ்வுதரும் பயணமாக அமைந்திருக்கிறது. நீதிமன்றக் காட்சிகளையும் சுவையாகப் படமாக்கியிருக்கிறார்.
சாம்.சி.எஸ். இசை, படத்தின் காட்சிகள், வசனங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்புகளை உயர்த்திப்பிடிக்கும் பணியைச் செவ்வனே செய்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்குக்குச் சவால் விடுகிற மாதிரியான திரைக்கதையோட்டம் அமைந்திருக்கிறது. அதை மிக இயல்பாகக் கையாண்டு படத்தைச் சுவாரசியமாக்கியிருக்கிறார்.
தமிழ்நாடு, கேரளா மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒன்றியத்திலும் சாமானிய மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரங்களை அம்பலப்படுத்தியிருப்பதோடு, அதற்கு உரிய விலை இதுதான் என்றும் சொல்லி அதிகார வர்க்கத்தினரை அதிரவைத்திருக்கிறார் இயக்குனர்
என்ன விலை – அன்புக்கும் மனிதத்திற்கும்
என்ன விலை – விமர்சனம்