கானா பாடகரான தாஸ், அவரது மகன் சிவா, பேரன் ஜீவா என மூன்று தலைமுறைகளாக இசையைத் தங்கள் வாழ்க்கையோடு இணைத்துக் கொண்ட குடும்பத்தின் கதையாக படம் விரிகிறது. மூவரிடமும் இசைத் திறமை இருந்தாலும், அந்தத் திறமைக்கான சரியான வாய்ப்புகள் கிடைப்பதில் தொடர்ந்து பல்வேறு தடைகளை சந்திக்கின்றனர். இசை உலகில் நிலவும் வர்க்க வேறுபாடு, சாதி சார்ந்த பாகுபாடு, குறிப்பிட்ட இசை வடிவங்களுக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம் என பல்வேறு சமூகப் பிரச்சினைகளையும் படம் பதிவு செய்கிறது.
படத்தின் முக்கியமான பலம் கானா இசைதான். பாடல்கள் உற்சாகமாகவும் ரசிக்கும்படியும் அமைந்துள்ளன. குறிப்பாக சில பாடல்களும் நடனக் காட்சிகளும் திரையரங்கில் ரசிகர்களை எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு கவர்கின்றன. ‘ஆரா 10/10’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் வகையில் அமைந்துள்ளன.
ஆனால், இசையில் இருக்கும் வேகம் திரைக்கதையிலும் இருந்திருக்க வேண்டியது அவசியம். படத்தின் முக்கியக் குறையாகத் தெரிவது திரைக்கதையே. கானா இசையை மையமாக வைத்து வலுவான கதையைச் சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும், பல இடங்களில் திரைக்கதை தேவையில்லாமல் சுற்றிச் செல்கிறது.
குறிப்பாக முதல் பாதியில் இடம்பெறும் காதல் காட்சிகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. இதனால் படத்தின் பிரதான பிரச்சினைக்குள் பார்வையாளர்கள் செல்வதற்கு அதிக நேரம் ஆகிறது. கானா இசையின் பின்னணியில் பேசப்படும் சமூகப் பிரச்சினைகள் கவனிக்கத்தக்கவையாக இருந்தாலும், அவற்றை மையப்படுத்திய திரைக்கதை இன்னும் கச்சிதமாக அமைந்திருந்தால் படத்தின் தாக்கம் கூடுதலாக இருந்திருக்கும்.
இசைத் துறையில் இருக்கும் அதிகார மையங்கள், ஏற்றத்தாழ்வுகள் போன்ற முக்கியமான விஷயங்களையும் படம் முன்வைக்கிறது. ஆனால், இந்தக் கருத்துகளை காட்சிகளின் வழியாக பார்வையாளர்கள் உணரும்படி சொல்லாமல், சில இடங்களில் வசனங்களின் மூலமாக நேரடியாக விளக்க முயற்சிக்கிறது. இதனால் சொல்ல வரும் கருத்து வலுவாக இருந்தாலும், அது ஏற்படுத்த வேண்டிய தாக்கம் முழுமையாக கிடைக்கவில்லை. அதோடு, கதையின் முக்கியமான பிரச்சினை இடைவேளைக்கு நெருக்கமாகத்தான் தெளிவாக வெளிப்படுகிறது.
ஆதி ஏற்றிருக்கும் மூன்று தலைமுறை கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பில் வேறுபாட்டை காண முடிகிறது. கருணாஸ் இடம்பெறும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் படத்தின் அழுத்தத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் காட்சிகளில் கருணாஸின் நடிப்பு சிறப்பாக கவனத்தைப் பெறுகிறது. பாபா பாஸ்கர் தனது இயல்பான நகைச்சுவை பாணியில் சில காட்சிகளை கலகலப்பாக்குகிறார். ஹர்ஷத் கான் பேசும் சில கவுன்டர் வசனங்களும் ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்துகின்றன.
முதல் பாகத்தில் இருந்த இளமைக்கே உரிய உற்சாகமும், எளிமையான உணர்வுகளைக் கையாளும் விதமும் இந்த இரண்டாம் பாகத்தில் சற்று குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. இதற்குப் பதிலாக, கானா இசைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற பரந்த பார்வையை படம் முன்வைக்கிறது. இந்த மையக் கருத்து சுவாரஸ்யமாக இருந்தபோதிலும், அதை முழுமையான வலுவான திரைக்கதையாக மாற்றுவதில் படத்துக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது.
மொத்தத்தில், கானா இசையின் பின்னணியில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வைக்கும் படமாக ‘மீசைய முறுக்கு 2’ அமைந்துள்ளது. பாடல்கள், சில நடிப்புத் தருணங்கள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. அதேநேரத்தில், கையில் இருந்த வலுவான கதைக்கருவை முழுமையாகப் பயன்படுத்தாத திரைக்கதையும், கதையின் மையப் பிரச்சினை தாமதமாக வெளிப்படுவதும் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. பாடல்களில் உணரப்படும் தாளமும் வேகமும், திரைக்கதையில் அதே அளவுக்கு உணரப்படவில்லை.
மீசைய முருக்கு 2 – கானா உலகத்தின் கனவு
மீசைய முறுக்கு 2 – விமர்சனம்