ஒரே கல்லூரியில் படிக்கும் ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், எதிர்பாராத பிரச்சினை ஒன்று அவர்களது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருவரையும் பிரிக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பணியில் சேரும் ஏகனின் வாழ்க்கையில், சக ஊழியரான ஃபெமினா ஜார்ஜ் காதலியாக வருகிறார். ஏற்கெனவே ஒரு காதலை இழந்துவிட்டதால், இந்தக் காதலையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார் ஏகன். ஆனால், கடந்த காலக் காதலின் நிழல் புதிய காதலிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டு காதலைக் காப்பாற்றுகிறாரா ஏகன்? அல்லது மீண்டும் ஒரு காதல் தோல்வியைச் சந்திக்கிறாரா? அவரது காதல் வாழ்க்கையில் அடுத்தடுத்து சிக்கல்கள் உருவாவதன் பின்னணி என்ன? காதலர்களின் உணர்வுகளை மட்டுமின்றி, தம்பதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களது உறவுகளைப் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியையும் முன்வைக்கிறது ‘ஹைக்கூ’.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘96’ திரைப்படத்தின் சாயல் ‘ஹைக்கூ’வில் ஆங்காங்கே தென்படுகிறது. இயக்குநர் யுவராஜ் சின்னசாமி அந்தப் படத்தால் ஈர்க்கப்பட்டு கதையை உருவாக்கியிருப்பது மட்டுமல்லாமல், சில காட்சிகளின் வழியாக அந்தத் தாக்கத்தை வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார். இருப்பினும், ஏற்கெனவே சொல்லப்பட்ட காதல் கதையின் பாதையில் பயணிக்காமல், அதில் இடம்பெறாத ஒரு புதிய அம்சத்தை மையமாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியிருப்பது கவனிக்கத்தக்கது. காதலர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் கதையைப் பொருத்திப் பார்க்கும் வகையில் காட்சிகளை அமைக்கவும் முயன்றிருக்கிறார்.
இதுவரை சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த ஏகன், இந்தப் படத்தில் கதையின் நாயகனாகப் பொறுப்பேற்றிருக்கிறார். காதல், ஏக்கம், பிரிவு எனப் பல்வேறு உணர்வுகளைக் கடத்த வேண்டிய கதாபாத்திரத்தில் ஓரளவுக்குச் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அதேசமயம், சில முக்கியமான தருணங்களில் அவரது நடிப்பில் தடுமாற்றம் தெரிகிறது. குறிப்பாக, முதல் காதலை நினைத்து ஏங்கும் காட்சிகளிலும், காதல் தோல்வியின் வலியை வெளிப்படுத்தும் இடங்களிலும் அவரது உடல்மொழி எதிர்பார்த்த அளவுக்கு உணர்ச்சிகளைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.
நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ் இருவரும் இயல்பான தோற்றத்துடன் திரையில் வலம் வருகிறார்கள். ஆனால், கதாநாயகிகளுக்குரிய திரை ஈர்ப்பையோ, பார்வையாளர்களைக் கட்டிப்போடும் தனித்துவத்தையோ அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. நடிப்பைப் பொறுத்தவரை, தங்களது கதாபாத்திரங்களுக்குத் தேவையானதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும், மனதில் நிற்கும் அளவுக்கு அவர்களது பங்களிப்பு அமையவில்லை.
அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி ஆகியோர் படத்தின் கதை நகர்வுக்கு உதவியிருக்கிறார்கள். இருப்பினும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்படாததால், அவர்களது நடிப்பைப் பற்றி அதிகம் பேசுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நெருக்கமான காட்சிகளின் வழியாக வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார் போலும்! காதல் காட்சிகளைப் பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் காட்சியமைப்புகளை உருவாக்குவதில் போதிய அக்கறை காட்டவில்லை. இதனால், படத்தின் காட்சிகள் பல இடங்களில் உயிரோட்டமின்றிக் கடந்து செல்கின்றன. தயாரிப்பாளர் செலவிட்டதாகக் கூறப்படும் ரூ.11 கோடியின் சுவடுகளைக்கூடத் திரையில் தேட வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்குப் படத்தின் காட்சியமைப்பிலும் கதாபாத்திரங்களின் திரை வெளிப்பாட்டிலும் பிரகாசம் குறைவாக இருக்கிறது.
படத்தின் முக்கியமான பலம் இசையமைப்பாளர் சித்து குமார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பவர், பலவீனமான காட்சிகளைக்கூட ஓரளவுக்கு ரசிக்கும்படி மாற்றியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, காதலின் இனிமை, பிரிவின் வலி, மனதுக்குள் ஏற்படும் போராட்டம் எனப் பல உணர்வுகளைக் காட்சிகளுடன் இணைக்கும் பின்னணி இசை, பார்வையாளர்களின் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காதல் உருவாவது, பிரச்சினை வெடிப்பது, பிரிவைச் சந்திப்பது, மீண்டும் காதலில் விழுவது, மறுபடியும் சிக்கல்களை எதிர்கொள்வது எனத் திரைக்கதை ஒரே வட்டத்திற்குள் சுற்றுகிறது. இந்தத் தொடர்ச்சியான நிகழ்வுகள் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தினாலும், படத்தொகுப்பாளர் சக்தி பிரணேஷ்.பி. தனது பணியின் மூலம் காட்சிகளின் தொய்வைக் குறைக்க முயன்றிருக்கிறார். திரைக்கதை தடுமாறும் இடங்களில் படத்தின் வேகத்தைத் தக்கவைக்க அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.
கூடுதல் திரைக்கதைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஹரிஹரன் ராம், கதையின் பிரதான போக்குக்கு நேரடியாகத் தொடர்பில்லாத சில கற்பனைகளையும் சுவாரஸ்யமாகக் கையாண்டிருக்கிறார். மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு மாணவனாக ஆண் ஒருவர் படிப்பது போன்ற கற்பனையை, காட்சிகளுக்குப் பொருந்தும் வகையில் நெருடலின்றி சொல்லியிருப்பது திரைக்கதைக்குக் கூடுதல் சுவை சேர்க்கிறது.
கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ் சின்னசாமி, காதல் திரைப்படத்தின் தாக்கத்தில் மற்றொரு காதல் கதையை உருவாக்கியிருக்கிறார். ஆனால், அவர் ரசித்துப் பார்த்த படத்தின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தைத் தனது படத்தின் வழியாகப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவதில் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. கதையின் மையக்கருவில் இருக்கும் உணர்வுகள் வலுவாக இருந்தாலும், அவற்றைத் திரையில் அழுத்தமாகப் பதிவு செய்வதற்கான காட்சியமைப்புகள் போதுமான அளவில் அமையவில்லை.
காதல் கதைகளில் நாயகன், நாயகி இருவரின் தேர்வும் இசையும் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்கள். இதில் இசை விஷயத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் இயக்குநர், கதாநாயகிகள் தேர்வில் கவனம் செலுத்தத் தவறியிருப்பது படத்தின் பலவீனமாக அமைந்திருக்கிறது. ஆனாலும், இறுதிப் பகுதியில் இயக்குநர் கையாளும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை படத்திற்குக் கைகொடுக்கிறது.
குறிப்பாக, கடைசி 20 நிமிடங்களில் காதல் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும், அவற்றை அணுக வேண்டிய விதத்தையும் படம் எடுத்துரைக்கிறது. காதலிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், திருமண வாழ்க்கையில் இருப்பவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான செய்தியை அந்தப் பகுதி முன்வைக்கிறது. இந்த இறுதிக்கட்ட அணுகுமுறையே, அதுவரை தடுமாறிக்கொண்டிருந்த படத்திற்குக் குறிப்பிடத்தக்க பலமாக அமைகிறது.