மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மனநல மருத்துவமனையில், 418-ம் எண் அறையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரால் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்கிறது. இதையடுத்து அந்தக் கட்டிடம் மூடப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதே கட்டிடம் மாணவர்கள் தங்கும் விடுதியாக மாற்றப்படுகிறது. இருப்பினும், 418-ம் எண் அறை மட்டும் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்படுகிறது. அந்த வளாகத்திற்குள் மாணவிகள் மட்டுமின்றி, மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பெண்கள் யாரும் நுழையக் கூடாது என்ற தடையும் கண்டிப்புடன் அமல்படுத்தப்படுகிறது.
புதிதாகக் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கும் சரண் லக்கராஜு, சூர்யராஜ் வீரபத்தினி ஆகியோருக்கு 417-ம் எண் அறை ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு அருகிலேயே இருக்கும் 418-ம் எண் அறையை எந்தக் காரணத்தைக் கொண்டும் திறக்க முயற்சிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.
இப்படியான சூழலில், ஒரு மாணவி யாருக்கும் தெரியாமல் ஆண்கள் விடுதிக்குள் நுழைய முயற்சிக்கிறார். அப்போது அறையில் தனியாக இருக்கும் சூர்யராஜ் வீரபத்தினியை மர்ம நிழல் உருவம் ஒன்று தாக்குகிறது. விடுதிக்குள் நுழைய முயன்ற பெண் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுகிறார். இதற்கிடையே, மர்ம உருவத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் சூர்யராஜ், தனக்கு நேர்ந்த சம்பவத்தை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்கிறார். ஆனால், அவரது அனுபவத்தை யாரும் நம்புவதில்லை.
இதனால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு வெளியேறிவிடலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால், தனது படிப்புக்காகப் பெற்றோர் வாங்கிய கடனும், தன்னைப் பற்றிய அவர்களது எதிர்காலக் கனவுகளும் அவரை அந்த முடிவிலிருந்து பின்வாங்கச் செய்கின்றன. எத்தகைய சவால்கள் வந்தாலும் படிப்பைத் தொடர வேண்டும் என்று உறுதியாக முடிவெடுக்கும் அவர், விடுதிக்குள் தொடர்ந்து நிகழும் மர்மச் சம்பவங்களுக்கான காரணத்தைக் கண்டறியக் களமிறங்குகிறார்.
418-ம் எண் அறையைச் சுற்றி நிகழும் அமானுஷ்யச் சம்பவங்களின் உண்மையான பின்னணி என்ன? இந்த மர்மத்திற்கான விடையை மாணவர்களால் கண்டறிய முடிந்ததா? பிரச்சினைக்குத் தீர்வு கண்டு ஆபத்திலிருந்து மீண்டார்களா? என்ற கேள்விகளுக்குப் பதில் தேடுகிறது ‘418’. வழக்கமான திகில் அனுபவத்துடன் நின்றுவிடாமல், உளவியல் பாதிப்புகளும் அவற்றால் உருவாகும் விளைவுகளும் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் படம் பேசுகிறது.
கல்லூரி மாணவர்களாகத் தோன்றும் சரண் லக்கராஜு, சூர்யராஜ் வீரபத்தினி, ஸ்ரீ வைஷ்ணவ், சஷாங் பாட்டில் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கொரோனா நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மாணவர்களின் நட்பு வட்டத்தில் இடம்பெறும் ப்ரீத்தி பகடலாவும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்.
அமானுஷ்யத் தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து தப்பிக்கும் மாணவராக நடித்திருக்கும் சூர்யராஜ் வீரபத்தினி, பதற்றம், அச்சம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் ஈர்க்கிறார். ஆபத்து சூழ்ந்திருப்பதை அறிந்தபோதும், அங்கு நடக்கும் மர்மங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அவர் கைவிடுவதில்லை. பயத்திற்கும் ஆர்வத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கும் அவரது மனநிலையை உடல்மொழியிலும் முகபாவனைகளிலும் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் பார்வையாளர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
சரண் லக்கராஜு, ப்ரீத்தி பகடலா இருவருக்கும் இடையிலான இளமையான நட்பும் காதல் உணர்வுகளும் படத்தின் திகில் சூழலுக்கு இடையே சற்றே இளைப்பாறும் தருணங்களை வழங்குகின்றன. மறுபுறம், ஆபத்தான சூழலில் சிக்கிக்கொள்ளும் மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் கதையின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. குறிப்பாக, சஷாங் பாட்டில், ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. இதனால் சில காட்சிகள் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்குப் பரபரப்பாக நகர்கின்றன.
படத்தின் மர்மத்துடன் நேரடியாகத் தொடர்புடைய தேவிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைத்ரா ஆச்சர், தனது தோற்றத்தின் மூலமே பார்வையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார். தெருக்கூத்துக் கலைஞரை நினைவூட்டும் உடையலங்காரத்துடன், புடவை அணிந்து கால்களில் சலங்கை ஒலிக்க அவர் நடந்து வரும் காட்சிகள் திகிலூட்டுகின்றன. அவரது தோற்றமும் நடையும் உருவாக்கும் அமானுஷ்ய உணர்வுக்கு மேலும் வலுசேர்க்கிறது அவர் பாடும் தாலாட்டு. ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்த்தும் அந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதில் ஒருவிதமான பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்குகிறது.