
சைரன்
விமர்சனம்
ஆயுள் கைதியான நாயகன் ரவி ஒருவாரம் பரோலில் வெளியில் மகளைப் பார்க்க வருகிறார். அவர் வந்த பிறகு வெளியில் சில கொலைகள் நடக்கின்றன. இந்தக் கொலைகளைச் செய்தது யார் என்று துப்பறிகிறது போலீஸ். விசாரணை அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். அவரையும் லாக்கப் மரணத்திற்காக சஸ்பெண்ட் செய்து பிறகு பணியில் சேர்த்திருக்கிறது காவல்துறை. இந்த நிலையில் இந்த தொடர் மரணத்தைச் செய்வது யார் என்று கண்டுபிடிக்க ரவியோடு மோதுகிறார் கீர்த்தி சுரேஷ். இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் ரவியின் மனைவி எப்படி மரணமடைந்தார் என்பதையும் திரைக்கதையில் விளக்குகிறார் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ்.
அம்மாவைக் கொலை செய்ததாக நினைத்து அப்பாவை வெறுக்கும் மகள், மகளின் மகிழ்ச்சிக்காகச் சிரித்துக் கொண்டே சிறைக்குப் போகும் அப்பா என்று செண்டிமென்ட் கதை. அப்பாவாக ஜெயம் ரவி நடுத்தர வயது மனிதராக நடித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு இது வித்தியாசமான கதாபாத்திரம். முடிந்த அளவுக்கு தன் பணியை நிறைவாகச் செய்திருக்கிறார் ரவி. மகளைப் பார்க்கத் தவிப்பதும். மகளுக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொள்வதும் என்று இன்னொரு ஜெயம் ரவியை நம்மால் பார்க்க முடிகிறது. சண்டைக் காட்சிகளிலும் ஆக்ரோஷம் காட்டுகிறார். க்ளைமேக்ஸ் சண்டை ரசிக்க வைக்கிறது. கீர்த்தியிடம் விளக்கும் இடத்தில் தன்னை குறுக்கிக் கொண்டு நடித்திருப்பது பாராட்டத்தக்கது. க்ளைமேக்ஸ் முன்பு வரைக்கும் இருந்த அமைதி காணாமல் போய் இறுதியில் விஸ்வரூபமாக மாறி நிற்கும்போது நல்ல நடிப்பு.
கீர்த்தி சுரேஷிற்கு குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்ற பாத்திரம். அவர் நடிக்க முயற்சி செய்தாலும் அப்பட்டமாகக் காட்டிக் கொடுக்கிறது அது நடிப்புத்தான் என்பது. லிப்ஸ்டிக், பான் கேக் பூச்சு படிய வாரிய தலை என்று சீரியஸாக அவர் வந்தாலும் சிரிப்பு போலீஸாகவே நமக்குத் தெரிகிறார். யோகிபாபு வரும் காட்சி மட்டும் கலகலப்பாக இருக்கிறது. முதல் காட்சியிலேயே தலை நிறைய முடியை வெச்ச போலீஸை நான் பார்த்ததில்லை என்று வசனத்தை வைத்து நேர் செய்கிறார்கள். சமுத்திரக்கனி எதுவும் செய்யத்தெரியாது காவல் அதிகாரியாக வந்து விரைப்பு காட்டுகிறார். சம்மதம் இல்லாமல் கீர்த்தியைத் திட்டும் காட்சிகள் எதற்கு என்று தெரியவில்லை. கீர்த்தி சஸ்பெண்ட் ஆன லாக்கப் மரணம் பற்றிய எந்த தகவலும் திரைக்கதையில் இல்லை. அனுபமா பரமேஸ்வரப் அப்பாவி செவிலியராக வந்து அநியாயமாகச் செத்துப் போகிறார். அருவி மதன் உட்படப் பலரும் நடித்திருக்கிறார்.
பல படங்களில் பார்த்த அதே காட்சிகள், அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடிகிற திரைக்கதை என்று அலுப்பு தட்டும் திரைக்கதையால் படம் தொங்கிக்கொண்டிருக்கிறது. க்ளைமேக்ஸ் எப்போது வரும் என்ற தவிப்பு நமக்கு ஏற்படுகிறது. இசையில் வழக்கம் போல் சத்தம் மட்டுமே இருக்கிறது. ஷாம் சி.எஸ்.
பாடலுக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார் பாடல் கேட்கும்படி இருக்கிறது.
சைரன் – அலற;ல் சத்தம்