கதை ;காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வரும் விஜய் சேதுபதி தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்கிறார். போலீசோ லட்சுமி என்றால் யார் என்ன என்று கேட்க அதற்குப் பல விதங்களில் மழுப்பும் விஜய் சேதுபதி ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல போலீஸோ இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். எப்படியாவது போலீசை இந்த வழக்கை விசாரிக்க செய்ய அவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதாக விஜய் சேதுபதி சொல்ல போலீசும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தக் கேசை கையில் எடுக்கிறது. யார் அந்த லட்சுமி..? விஜய் சேதுபதி ஏன் அந்த லட்சுமியை லஞ்சம் கொடுத்தாவது மீட்க நினைக்கிறார் என்பதை திடுக்கிடும் திருப்பத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் நித்திலன்.
நடிப்பு ; விஜய் சேதுபதி தனது வித்தியாசமான உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். அபிராமி, வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன், முனீஷ்காந்த் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சச்சனா கவனம் பெறுகிறார். மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா கதாபாத்திரங்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு சிறப்பு . காட்சிகள் கோரும் உணர்வுக்கு அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை பாதி தீனியிடுகிறது. படத்தின் முக்கியமான பலம் ஃபிலோமின் ராஜ். படத்தை நீட்டி இழுக்காமல் கச்சிதமாகவும், நான் லீனியர் முறையில் காட்சிகளை எந்தவித குழப்பமில்லாமல் சொல்லியது படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு எப்போதுதாவது இது போன்ற திரைப்படங்கள் வந்து தமிழ் சினிமா மீது மரியாதை ஏற்படுத்துகிறது. அதில் மஹாராஜா நம் அனைவரின் மனதிலும் சிம்மாசம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.