KollywoodNow

Tamil CInema Updates

மும்பை போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்திற்கு சென்றவுடன்- நட்டி வியந்து போனேன்

அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் – தினேஷ் – சுபேந்தர் – ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் ‘பிக் பாஸ்’ முத்துக்குமரன் , தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் நட்டி என்ற நட்ராஜ் பேசுகையில், ” அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதையை சொல்வார்கள். கதையை கேட்டு விட்டு இரண்டு நாள் கழித்துதான் சொல்கிறேன் என்று தான் பதிலளிப்பேன். ஆனால் இயக்குநர் பிரிட்டோ இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது… கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படத்திற்காக நான் முதல் நாள் கலந்து கொண்ட போது, இயக்குநர் அதற்கு முன் படமாக்கிய காட்சிகளை என்னிடம் காண்பித்தார். அது அவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் போல் இல்லை. நேர்த்தியாக உருவாக்கி இருந்தார்.

இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய காட்சியிலும் இயக்குநர் தன் தனித்திறமையை காண்பித்து இருக்கிறார். அதை அனைவரும் ரசிப்பார்கள்.

நான் மும்பையில் சுற்றித் திரியாத தெருக்களே இல்லை. அந்த அளவிற்கு மும்பை எனக்கு பரிச்சயம். ஆனால் இந்தப் படத்தில் நான் மும்பை போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்திற்கு சென்றவுடன் வியந்து போனேன். ஒவ்வொரு சிறிய விசயத்தையும் கலை இயக்குநர் நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். அவருக்கும் இந்த தருணத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தில் என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *