நாங்கள் – விமர்சனம்
பெற்றோர்கள் பிரிந்து வாழும் நிலையில், மூன்று சகோதரர்கள் கண்டிப்பான தனது தந்தையுடன் வசிக்கிறார்கள். பணக்கார அப்பாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால், தங்களது சிறுவயது பருவத்தை தொலைத்துவிட்டு, வீட்டு பொறுப்புகளில் மூழ்கும் மூன்று சகோதரர்களும், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து, பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்கிறார்கள், சிறுவர்களின் மனநிலையை புரிந்துக் கொண்டு அவர்களது தந்தை மாறினாரா? இல்லையா?, என்பதே நாங்கள்’ படத்தின் கதை.
இந்த படத்தின் மூலம் அப்துல் ரஃபே என்ற குணச்சித்திர நடிகர் கிடைத்திருகிறார். அந்தக்கால பிரதாப் போத்தன் மாதிரியான நடிப்பு. கண்டிப்பும், மனைவியை பிரிந்து வாழும் குற்றஉணர்வும், தொழிலில் ஏற்பட்ட தோல்வியின் வலியும் அவரது முகத்தில் காட்டியிருப்பது ரசிக்க முடிகிறது. படம் முழுவதும் அவரது மேலே இருக்கிறது. ஆனால் படம் மனதை தொடுகிறது.
சிறுவர்களை கையாளுவதில் முரட்டுத்தனத்தைக் காட்டினாலும் அப்பாவாக சரி என்றே நமக்கு பட வைக்கிறது. அவிநாஸ் பிரகாஷ் திரைக்கதை. ஒளிப்பதிஉம், எடிட்டிங் பணியும் இவரே செய்திருக்கிறார். கதை நடக்கும் ஊட்டி படத்திற்கு இன்னொரு பலமாக இருக்கிறது. மனைவி கடைசியாக கணவனுடன் பேசிப்பார்க்கலாம் என்று வந்து ஏமாற்றத்துடன் திரும்பிப் போகும் காட்சி மனதை கலங்க வைக்கிறது. கதை நடக்கும் இடம் ஒரு காரணம் என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மா போய் விட்டார் என்பது தெரிந்து சிறுவன் அழும் காட்சி படம் முடிந்த பிறகும் நமக்குள் கேட்கிறது. பாசத்தின் வலி அது.
இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களம் மற்றும் காட்சிகளில் இருக்கும் இருக்கமான சூழ்நிலையை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.
கதைக்களம் ஊட்டி என்றாலும், அதன் அழகைவிட கதாபாத்திரங்களின் உணர்வுகளை காட்சிப்படுத்திய விதம் பாலுமகேந்திராவை நினைவுப்படுத்துகிறது. அதேபோல், விறுவிறுப்பில்லாத காட்சிகளாக இருந்தாலும், அதை தனது படத்தொகுப்பு மூலம் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதில் சிறந்த படத்தொகுப்பாளராகவும் கவனம் ஈர்க்கிறார்.
நாங்கள் – அழகு