KollywoodNow

Tamil CInema Updates

மகா சேனா – விமர்சனம்

விமல் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம். வனத்திற்குள் வாழும் மக்களின் நம்பிக்கைகளும், வாழ்க்கை முறையும் பேசும் படமாக வந்திருக்கிறது.

பழங்குடியினரான நாயகன் விமல் சேனா என்ற யானையை வளர்க்கிறார். அவரது மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஷ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய், மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடியின மக்களை வைத்து திருட திட்டமிடுகிறார். இதற்கிடையே மதம் பிடித்த விமலின் யானை அவரது மகளை தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்று விடுகிறது. யானையை தேடி காட்டுக்குள் செல்லும் விமல், கோவில் சிலை கடத்தல் திட்டத்தை முறியடித்தாரா ? , காட்டுக்குள் சென்ற யானை என்னவானது ? என்பது தான் படத்தின் கதை.

விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக வந்து போகிறார். பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக அவரைக் காட்டியிருந்தாலும் தோற்றத்திலும், பேச்சிலும் அதற்கான எந்த அடையாளமும் தெரியாமல் படம் முழுவதும் வருகிறார். முழு ஈடுபாடும் இல்லாமல் அவர் நடித்திருப்பதால் நமக்கும் படத்தில் எந்த்வித ஈடுபாடும் வரவில்லை.
சிருஷ்டி டாங்கே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். அவர் மட்டும் உடையில் மலைவாழ் மக்களாக தெரிகிறார். இயக்குனர் சொன்னதை செய்துவிட்டுப் போகிறார்.

யோகிபாபு ஒரு நாள் மட்டும்தான் கால் ஷீட் கொடுத்திருப்பார் போல ஒரே காட்சியோடு வந்து போகிறார். அந்தக் காட்சியும் எடுபடவில்லை.

வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா ஆகியோர் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர், காட்சிகளை படமாக்கிய விதம் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை திரையில் காட்டியிருக்கிறது.

இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

கதையும் திரைக்கதையும் நேர்கோட்டில் பயணிக்காததால் காட்சிகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுவராஸ்யம் இல்லாத நிலையில் பல காட்சிகள் இழுவை.
மகாசேனா – மகா சோதனை
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *