JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”.
வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
இசையமைப்பாளர் அஷ்வமித்ரா பேசியதாவது..,
எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர் சினேகன் அவர்கள் மிக அழகான பாடல் வரிகள் தந்தார். அருண் பாரதி அவர்களும் அற்புதமான பாடல் வரிகள் தந்தார். மிக நல்ல படம், அனைவரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். அனைவருக்கும் நன்றி.
ப்ரமோ பாடல் இசையமைப்பாளர் அகத் மகேந்திரன் பேசியதாவது..,
இந்த பாடலை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த பாடலுக்கு பல பேரை அணுகி, இறுதியில் இயக்குநர் சரண் சாரை அணுகினோம். அவர் படத்தில் எப்போதும் எல்லாப்பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகிவிடும். அவர் அழகான பாடலை எழுதித்தந்தார். பாடல் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சரண் பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு ஒரு பாடலாசிரியராக (Lyric Writer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன், என் இயக்கத்தில் உருவான வட்டாரம் படத்தில் இடம்பெற்ற “யார் தருவார் இந்த அரியாசனம்” என்ற பாடலை நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு அமையவில்லை. காரணம், என் படங்களில் பெரும்பாலும் வைரமுத்து அவர்களே பாடல்களை எழுதுவார்.
இந்த படத்தின் இயக்குநரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் மிகுந்த சுறுசுறுப்பும், தெளிவான சிந்தனையும் கொண்ட இளம் படைப்பாளி. இசை மற்றும் சினிமா உலகின் பல முக்கிய ஆளுமைகளுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. அதனால் அவரிடம் ஒரு தெளிவான கலை நோக்கு (Vision) இருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் “இன்றைய காலத்திற்கேற்ற, ஒரு பாடல் வேண்டும்” என்று கேட்டார். அதனை நான் ஒரு சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இந்தப் பாடலை எழுதினேன்.
இந்த பாடல், இன்றைய சமூகச் சூழ்நிலையை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, 1900களில் சென்னை உருவாகிய காலகட்டத்தில், குறிப்பாக பிளாக் டவுன் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், அவற்றின் அர்த்தங்கள் மற்றும் அகராதி குறிப்புகளை ஆராய்ச்சி செய்தேன். அந்த காலத்துச் சொற்களைப் பாடலின் பின்னணியில் இணைத்தால் தனித்துவமான அழகு கிடைக்கும் என்பதால், அந்த ஆய்வின் அடிப்படையில் இந்த பாடலை உருவாக்கினேன்.
இந்த பாடல் ஒரு ப்ரமோஷனல் சாங்காக இருந்தாலும், அதை மனதார ஏற்றுக் கொண்டு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, அகத் மகேந்திரன் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். குறிப்பாக இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநருக்கு என் சிறப்பு நன்றி.
புதிய நாயகி சிம்ரன் அத்வானி படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். அவரது கண்கள் நிறையப் பேசுகின்றன. அவர் இன்னும் பல சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நாயகன் ஆதவ் கிருஷ்ணா அவர்களுக்கும் என் வாழ்த்துகள். அவரது முகத்தில் ஒரு இயல்பான குறும்பும், தனித்துவமும் தெரிகிறது. Next-door boy கதாபாத்திரங்களுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். வருங்காலத்தில் அவர் மேலும் பல படங்களில் நடித்து உயர்ந்த இடத்தை அடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.