KollywoodNow

Tamil CInema Updates

தடயம் – விமர்சனம்

க்ரைம் கதைகளின் வரிசையில் புதிதாக வந்திருக்கும் தடயம் நேர்த்தியான திரைக்கதையால் மனதை அள்ளுகிறது.
90களில் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் நடந்த இரட்டை கொலைகளை மையமாக வைத்து இந்த இணையத் தொடரின் கதை உருவாகியிருக்கிறது.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என்று இரட்டைக் கொலைகளாக தொடர்ந்து நடைபெறுகிறது . கொலையாளி வேறு எதையும் திருடிச் செல்லாமல் மனைவியின் தாலியையும் கணவனின் அரைஞான் கயிற்றையும் திருடிச் செல்கிறான்.தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் கிராமப்புறத்தில் நடக்கும் இந்தக் கொலைகள் பற்றி எந்தத் தடயமும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது.
அதன் நுனி தேடி போலீஸ் புலனாய்வுக் குழு ஆந்திரா செல்கிறது. அங்கே சென்ற பின் இது போல் வேறு தொடர் கொலைகள் நடந்திருப்பது தெரிய வருகிறது. இப்படி 76 கொலைகள் நடந்திருப்பதையும் ஆனால் எந்தத் துப்பும் துவங்காமல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைகிறது புலனாய்வுக்குழு. இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெரிய துப்பு கிடைக்கிறது. அதைப் பற்றிக் கொண்டு அதன் ஓடு பாதையில் சென்று குற்றவாளிகளைத் தேடிச் செல்கிறார்கள், எப்படிப் பிடிக்கிறார்கள் என்பது தான் மீதிக்கதை .ஆனால் இதற்கு இடையே குற்றவாளிகளின் குற்றத்திற்கான பின்புலம்,தூண்டுதலாக உள்ள பழிவாங்கும் உணர்ச்சி,பழி வாங்கும் உணர்ச்சியே எப்படி ஒரு போதையாக மாறி அப்பாவிகளையும் கொல்லும் போக்கு என்று மாறுகிறது என்பதையும் காட்டியுள்ளார்கள்.
காவல்துறையில் அதிகாரிகள் மத்தியில் நடக்கும் ஆணவ சிக்கலால் அகங்காரப் போட்டியால் புலனாய்வுப் பணிகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதையும் காட்டுகிறார்கள். பொதுவாக அரசு அமைப்புகளில் அதிகார மட்டங்களில் திறமைசாலிகளை மட்டம் தட்டுவதும்,புறக்கணிப்பதும் திறமை குறைந்த வெத்து வேட்டுகள் அதிகாரத்தில் ஓலைச்சுவோராக உள்ளதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.மூணாறு ரமேஷ் ,சமுத்திரக்கனி பாத்திரங்களின் மூலம் அதிகார ஆணவ மோதல் போக்குகள் காட்டப்பட்டுள்ளன.
சமுத்திரக்கனியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்கிறது.
லக்ஷ்மியாக வரும் ஷிவாதா, ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் உறுதி, கட்டுப்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை சமநிலையுடன் வெளிப்படுத்துகிறார். அவரின் கதாபாத்திரம் தொடர் முழுவதும் முக்கியத்துவம் பெறுகிறது.
தொடரின் பலம் அதன் மனிதநேயக் கோணங்களில் உள்ளது. கதாபாத்திரங்களின் உளவியல் பரிமாணங்கள் நுட்பமாக சித்தரிக்கப்படுவதால், பார்வையாளர்கள் உணர்ச்சிப் பிணைப்பை உணர முடிகிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும் ‘தடயம்’ வலுவாக உள்ளது. ஒளிப்பதிவில் நிறத் தோற்றமும் கேமரா கோணங்களும் காட்சிகளுக்கு இயல்பான இருண்மையை அளிக்கின்றன. பின்னணி இசை பதட்டத்தை உயர்த்துகிறது. காலப்பின்னணியை உயிர்ப்பிக்கும் கலை இயக்கம், இயக்குநரின் கற்பனையை திரையில் உறுதியாக வெளிப்படுத்துகிறது. குறுகிய ஓட்ட நேரம் தொடர் விறுவிறுப்பை குறையாமல் காக்கிறது.
எனினும், சில இடங்களில் விளக்கங்கள் தெளிவின்றி விடப்படுகின்றன. தொடக்கத்திலேயே வில்லன்களின் அடையாளம் வெளிப்படுவது சில திரில்லர் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். மேலும், சில காட்சிகளில் அதிகமான ரத்தக்கலப்பு நெருக்கக் காட்சிகளில் கொடூரமாகத் தோன்றுகிறது.
தொடர் கொலை செய்யும் பாத்திரத்திரங்களின் உணர்வைக் கூறும் போது அவர்கள் செய்யும் கொலைக்கான காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.என்றாலும் உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தத் தொடரை எடுத்திருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சி தருகிறது.
சமுத்திரக்கனி , ஷிவதா , ராஜ் திரன் தாஸ், பிரேம், மூணாறு ரமேஷ், சுந்தர் பாண்டியன், கொற்றவை , அழகன் தமிழ்மணி,விநாயகன், புலிப்பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.நவீன் குமார் பழனிவேல் இயக்கியுள்ளார். தினேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். . அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.
தடயம் – திடுக் திரில்லர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *