KollywoodNow

Tamil CInema Updates

கார்மேனி செல்வம் – விமர்சனம்

கடற்கரையோரம் ஒரு சிறிய வீட்டில், கார் ஓட்டுநராகப் பணிபுரியும் செல்வம் (சமுத்திரக்கனி), தன் மனைவி சாந்தி மற்றும் மகன் பாலுவுடன் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சாந்தி ஒரு தள்ளுவண்டி உணவுக்கடை நடத்தி செல்வத்திற்குத் துணையாக இருக்கிறார்.
இவர் ஒரு பெரும் செல்வந்தரான சம்பத் என்பவரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிகிறார். செல்வத்திற்குத் தனது குடும்பத்தின் வறுமையை போக்க வேண்டும், தன் குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு.இவர்களின் மகிழ்ச்சியில் விரிசல் விழுவது ‘சமூகம்” உள்ளே நுழையும்போதுதான். செல்வத்தின் தங்கை மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்குச் செல்லும் இவர்கள், தங்கள் சக்திக்கு மீறி சீர் செய்தும் அங்கு அவமதிக்கப்படுகிறார்கள். ‘நம் மகனின் எதிர்காலத்திற்கு நாம் என்ன சேர்த்து வைத்திருக்கிறோம்?” என்ற சாந்தியின் கேள்வி, செல்வத்தின் மனதில் அதுவரை இருந்த நிம்மதியைக் குலைத்து, பணத்தின் மீதான வேட்கையைத் தூண்டுகிறது. முதலாளி சம்பத் குடும்பத்துடன் திடீரென வெளிநாடு செல்கிறார். அந்த சமயத்தில் மகனின் அவசர மருத்துவ செலவிற்கு தன் உறவினரிடம் கடன் பெறுகிறார். அந்த கடனை திருப்பி தர தன் முதலாளி சம்பத்தின் சொகுசு காரை அவருக்குத் தெரியாமல் வாடகைக்கு ஓட்டுவது, அதன் நம்பர் பிளேட்டை மாற்றுவது என செல்வம் நேர்மையற்ற பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார். ‘வெள்ளையா இருந்தா சம்பாதிக்க முடியாதுப்பா” என்று அவர் தன் மகனிடம் சொல்லும் வசனம், சமூகத்தின் கசப்பான யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. பின்னர் தவறான வழிகாட்டுதல், அதிக பண ஆசை காரணமாக அவரின் பாதை மாறி கடனில் சிக்குகிறார். அதே நேரத்தில் முதலாளி சம்பத்தின் கார் விபத்தில் சிக்க லட்சங்களில் செலவு வைக்கிறது. முதலாளி திரும்புவதற்குள் காரை எவ்வித சேதமும் இல்லாமல் மீண்டும் அவரது வீட்டில் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார் செல்வம். இதற்கெல்லாம் ஈடு செய்ய ஷார்ஷாவில் டிரைவர் வேலைக்கு செல்ல முடிவு செய்கிறார். அங்கே சென்ற செல்வத்தால் வேலையில் நீடிக்க முடிந்ததா? கடனை அடைத்தாரா? தன் பழைய முதலாளியிடம் உண்மையை சொன்னாரா? என்பதே படம்
சமுத்திரக்கனி, ஒரு சராசரி மனிதனின் நிம்மதி, பேராசை மற்றும் வீழ்ச்சியைத் தனது முதிர்ச்சியான நடிப்பால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தர்ம சங்கடமான சூழல்களில் அவர் காட்டும் முகபாவனைகள் அபாரம்.
இப்படத்தில் சமுத்திரக்கனியையும் மிஞ்சி ஸ்கோர் செய்கிறார் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி. ஒரு சராசரி நடுத்தர வர்க்கப் பெண்ணின் எதிர்பார்ப்புகளையும், ஆற்றாமையையும் மிகத் துல்லியமாகப் பிரதிபலித்துள்ளார். ‘வாழ்க்கையில் எவ்வளவு செல்வம் இருந்தாலும் சாந்தி (நிம்மதி) அவசியம்” என்ற சொல்லாடலுக்கு அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார். சிறுவன் கரண் சக்கரவர்த்தி, பாலுவாகத் தனது துடிப்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறான்.
கௌதம் மேனன், அபிநயா ஆகியோர் பாத்திரங்கள் அழுத்தமாக இருந்தாலும் அது முக்கிய பாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதாக இருக்கிறது. இதனால் கதையோட்டம் திசைமாறுகிறது.
ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன் கடற்கரை ஓரத்து வாழ்வியலையும், அந்தச் சிறிய வீட்டின் நெரிசலையும், வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களின் மனநிலைமையையும் மிக எதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்.
ராமானுஜனின் இசையில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் கதையின் கனத்தை உணரச் செய்கிறார். இயக்குனர் ராம் சக்ரி நல்ல கதையாக கொடுத்திருந்தாலும் காலம் தாண்டி நிற்க் அப்டேட் காட்சிகள் இல்லை. இதனால் படத்தில் தொய்வு தெரிகிறது.
பணக்காரர் போல செல்வு செய்ய நேரிட்டால் என்னமாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை படம் பேசுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *