கிரிக்கெட் மீது இருக்கும் அளவுகடந்த ரசிகர் பாசம் ஒருபுறம், அந்த விளையாட்டைச் சுற்றி இயங்கும் சட்டவிரோத பெட்டிங் உலகம் மறுபுறம். இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாக இணைத்து, சுவாரஸ்யமான பயணக் கதையாக உருவாக்கப்பட்டுள்ள வெப் தொடர்தான் மம்மட்டியான் ஸ்டார்ஸ்.
தங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் நட்சத்திரமான எம்.எஸ். வீர்சிங் தனது கடைசி போட்டியில் விளையாடுகிறார் என்ற செய்தி, மூன்று நண்பர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பயணத்திற்கு வழிவகுக்கிறது. கிராமத்தில் இருந்து சென்னை வரை அவர்கள் மேற்கொள்ளும் அந்தப் பயணம், கனவு நிறைவேறும் சந்தோஷத்தை மட்டுமல்லாமல், எதிர்பாராத ஆபத்துகளையும், கிரிக்கெட் பெட்டிங் கும்பலின் சதியையும் சந்திக்க வைக்கிறது. அந்தச் சிக்கல்களில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே தொடரின் மையக்கரு.
நடிப்பில் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் ஆகியோர் மூவரும் நண்பர்களின் கெமிஸ்ட்ரியை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களும், நகைச்சுவை காட்சிகளும் பார்ப்பவர்களை கதையுடன் இணைத்துக் கொள்கின்றன.
லாவண்யா அன்பழகன் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சிறப்பாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் நம்பகத்தன்மையை சேர்க்கின்றனர்.
பி.எம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து இயற்கை சூழலிலிருந்து மாநகரத்தின் பரபரப்பு வரை காட்சிகளை அழகாக பதிவு செய்கிறது. பரத் தனசேகரின் பின்னணி இசை சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சி காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. பவித்ரன் கே-வின் படத்தொகுப்பு எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் கதையை நகர்த்துகிறது.
இயக்குநர் சவிர் சுதாகர், ரசிகர்களின் உணர்வுகளை மையமாக வைத்துக்கொண்டு, அதில் சமூக கருத்தையும் இயல்பாக கலந்து சொல்லியிருக்கிறார். கிரிக்கெட் மீது இருக்கும் பைத்தியக்கார ரசிகர் மனநிலையை மட்டுமல்லாமல், பெட்டிங் என்ற ஆபத்தான வலையில் இளைஞர்கள் எப்படி சிக்குகிறார்கள் என்பதையும் வலுவாக பதிவு செய்கிறார். சில எபிசோடுகளில் திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும், இறுதிக்கட்டத்தில் வரும் திருப்பங்கள் அதை ஈடுகட்டுகின்றன.
இயக்குனர் சவிர் சுதாகர்
வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், லாவண்யா அன்பழகன், நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.