KollywoodNow

Tamil CInema Updates

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

விஷ்ணு விஷால் மற்றும் கீர்த்தி ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியினர் தங்களது குட்டி மகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். தன் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அவரது மல்யுத்த கனவுக்கு துணை நிற்கிறார் வீரா. கீர்த்தி ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டே தன் மல்யுத்த பாதையில் தொடர, வீரா வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக்கொள்ளும் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆக இருக்கிறார்.
கீர்த்தி விளையாட்டில் அடுத்தடுத்த உயரங்களைத் தொட முயலும்போது, அவருக்கு எதிராக அவரது கோச் சதி செய்கிறார். இதில் வீரா பகடைக்காயாக மாற, கணவன் – மனைவி இடையே விரிசல் விழுகிறது. இவர்களுக்கு நடுவில் இவர்களது மகள் எப்படித் தவிக்கிறார், என்பதை கலகலப்பாகவும், செண்டிமெண்டாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் செல்ல அய்யாவு.
விஷ்ணு விஷால், ஒரு ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல், மனைவியின் வெற்றிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒரு பொறுப்பான ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாகவும் இயல்பாகவும் கையாண்டுள்ளார். தண்ணீர் பிடிக்கும் பெண்கள் கூட்டத்தில் முண்டியடித்துக் குடங்களுடன் உள்ளே நுழைந்து வெளிவரும் காட்சியிலிருந்து படம் முழுவதும் நகைச்சுவையில் சரவெடியாய் வெடிக்க வைக்கிறார். அதே சமயம், சில ஆக்ஷன் காட்சிகளில் பின்னிப் பெடல் எடுத்து தான் ஒரு மாஸ் ஹீரோ என்பதையும் கச்சிதமாக நிரூபித்துள்ளார். குறிப்பாக, ‘அப்படி போடு’ பாடலுக்கு நடிகை மோக்ஷாவுடன் அவர் போடும் ஆட்டம் திரையரங்கையே குலுங்க வைக்கும் ரகம். குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பான கணவராகவும், தேவையான இடங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் திரையில் கவனம் ஈர்க்கும் விஷ்ணு விஷால், மனைவி மீது வைத்திருக்கும் அன்பு, மகளுடனான பாசம் மற்றும் குடும்பத்திற்காக போராடும் உணர்வுபூர்வமான காட்சிகளில் தனது அனுபவமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஐஸ்வர்யா லெட்சுமி, முதல் பாகத்தை விட இந்த முறையில் இன்னும் பலமான, அழுத்தமான கீர்த்தி கதாபாத்திரத்தில் வந்து பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறார். சுயமரியாதைப் பெண், அட்டகாசமான குஸ்தி வீராங்கனை, தொட்டால் சிலிர்க்கும் பொண்டாட்டி, பிள்ளையின் நலனுக்கான ஸ்ட்ரிக்ட்டான அம்மா என எல்லா வகையிலும் பிரம்மிப்பான பங்களிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். ஐஸ்வர்யா லெக்ஷ்மி மல்யுத்த காட்சிகளில் காட்டியுள்ள உழைப்பு அசாத்தியமானது. அவர் தனது ஆக்ரோஷமான உடல் மொழியையும், குடும்பப் பெண்ணுக்கான எமோஷன்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குஸ்தி களத்தில் முரட்டுத்தனமான உடல் மொழியைக் காட்டி அதிரடியாக மோதும் வீராங்கனை யாகவும், குடும்ப வாழ்க்கையில் உணர்ச்சிவசப்படும் மனைவியாகவும் இரு வேறு பரிமாணங்களிலும் தனது திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கிளைமாக்ஸ் குஸ்தி காட்சிகளில் அவரது உழைப்பும், பார்வையாளர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது
விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா, படம் முழுவதும் நம் மனதைக் கொள்ளை கொண்டு போகிறார். தனது மழலை கொஞ்சும் சுட்டித்தனமான நடிப்பால் பல முக்கிய காட்சிகளில் திரையரங்கையே கலகலக்க வைத்து ரசிகர்கள் கைதட்டல்களை பெறுகிறார். அப்பா-மகள் பாசப் பிணைப்பு விவரிக்கும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு நம் மனம் தானாய் கனியும்படிச் செய்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் தமக்கே உரிய தனித்துவமான முகபாவனைகள் மூலம் மதி மலர் கதாபாத்திரம் வழியாக ஒட்டுமொத்தப் படத்திற்கும் பெரும் வலு சேர்த்துள்ளார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பின்னணி இசையை திரைக்கதை நகர்வுக்கு ஏற்ப அட்டகாசமாக அமைத்து, ஒட்டுமொத்தத் திரைப்படத்திற்கும் பெரும் வலு சேர்த்து மெருகேற்றி உள்ளார். இயக்குனர் எதிர்பார்த்ததை நன்றாக உள்வாங்கி, குடும்பப்பாங்கான எமோஷனல் காட்சிகள் மற்றும் கலகலப்பான நகைச்சுவை தருணங்களை உணர்வுப்பூர்வமான இசையால் கையாண்ட விதம் அருமை. பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பின்னணி இசை ஒவ்வொரு காட்சியின் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களைக் கட்டிப் போடும் வகையில் கச்சிதமாக அமைந்துள்ளது.
கட்டா குஸ்தி 2 – காமெடி திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *