ஒரு சாதாரண அரசு ஊழியரான ராஜீவன் தற்செயலாக வங்கிக் கொள்ளை ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். அந்தக் கொள்ளை சம்பவம், மனைவி மீரா மற்றும் இரு பெண் குழந்தைகள் கொண்ட அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றி, விருப்பமில்லாத திருப்பங்களின் தொடக்கப் புள்ளியாக அமைகிறது. பின்னர் அவரது வாழ்வும், குடும்பமும், கொள்ளை போன பணமும் என்ன ஆனது என்பதே கதை.
மலையாள சினிமாவில் புகழ்பெற்ற ‘த்ரிஷ்யம்’ ஜார்ஜ் குட்டி போலவே தன் குடும்பம், மகள்களைக் காக்க எல்லா எல்லைகளுக்கும் செல்லும் ஒரு சாமானியனின் கதை இது.
நாயகனின் சிக்கலான குடும்ப வாழ்வு, அலுவலக வெறுமை, மகள்களின் மீதான பாசம் என தலைகீழ் இயக்கத்தில் காட்சிகள் விரிகின்றன.
பரபரப்பான திருப்பங்கள், கணவன் – மனைவி அகச் சிக்கல்கள், அவர்களோடு தொடர்பான ஒரு வங்கிக் கொள்ளை, துரத்தும் காவல் துறை என முதல் பாதியை மிகவும் அட்டகாசமாக நகர்த்தியிருக்கிறார்கள். ஃப்ளாஷ்பேக் யுக்தி இல்லாமலே கதையும், கதையின் ஆதார சிக்கல்களும் நமக்கு நேரடியாகவே புரிய வைக்கப்படுகிறது.
முதல் பாதியின் விறுவிறுப்பான எழுத்தும், நேர்த்தியான ஒளிப்பதிவும், அட்டகாசமான படத்தொகுப்பையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பின்னணி இசை ஓரளவுக்கு உதவி செய்த போதிலும், பாடல்கள் வேகத் தடையாகிப்போனது சோகம். இவற்றை விட சண்டைக்காட்சி அமைப்புகள் சிறப்பு. குறிப்பாக மின்தூக்கி சண்டைக்காட்சியில் வடிவமைப்பும் படத்தொகுப்பும் வெகு பிரமாதம்.
மலையாள படங்களில் இருக்கும் அதே பரபரப்பு, திரைக்கதையில் திருப்பங்கள் என்று படம் வேகமெடுக்கிறது.
பிரித்விராஜ், பார்வதி திருவோது ஆகியோர் பலமாக இருக்கிறார்கள்.
இயக்குநர் நிசாம் பஷீர் ஒரு சாதாரண மனிதனை மையமாக வைத்து சமூகத்தின் பேராசை மற்றும் அதிகார அரசியலை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து சமூக உளவியல், மீடியா விசாரணை, அரசியல் ஆகியவற்றை இணைத்து விதம் வித்தியாசமான முயற்சி. முதல் பாதி முழுவதும் மர்மம், சஸ்பென்ஸ், விறுவிறுப்பு ஆகியவற்றை நேர்த்தியாக கட்டமைத்து பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிறார். ஒவ்வொரு திருப்பத்தையும் துல்லியமாக கையாளும் அவரது உழைப்பு திரையில் தெரிகிறது.
நல்ல பொழுதுபோக்கு திரில்லர் படம்
ஐ நோபடி- விமர்சனம்