ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது.
இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நடிகர் அதர்வா முரளி பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி வாழ்க்கை முடிந்து, கடைசி நாளில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு ரீயூனியன் நிகழ்ச்சியில் நிற்பது போன்ற உணர்வுதான் இப்போது எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படக்குழுவுடன் ஒரு அழகான பயணத்தை பகிர்ந்திருக்கிறோம்.
‘இதயம் முரளி’ திரைப்படத்தின் பயணம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை அப்போது முதன்முதலாக ஒரு இயக்குநராகவே சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலேயே இந்தப் படத்தின் தலைப்பு, தோற்றம், உணர்வு என அனைத்தையும் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். இன்று அந்தக் கனவை நாங்கள் நினைத்தபடியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.
முதலில், இந்தப் படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணம்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், விக்ரம் மற்றும் முழு தயாரிப்புக் குழுவிற்கும் என் நன்றி. இன்றைய காலத்தில் இவ்வளவு வண்ணமயமான, மனதை வருடும், இலகுவான காதல் கதையை தயாரிக்க முன்வருவது மிகப்பெரிய விஷயம். அதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற ரெட் ஜெயன்ட் மூவீஸுக்கும் என் நன்றி.
இப்படிப்பட்ட காதல் கதைக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆகாஷிடம் ‘இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் யார்?’ என்று கேட்டபோது, ‘மனோஜ் பரமஹம்சா சார் தான்’ என்று சொன்னார். அதை கேட்டவுடனே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு பாடலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் முழு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ‘எல்லோரையும் லட்டு மாதிரி அழகாகக் காட்டுகிறேன்’ என்று அவர் சொன்னது போலவே, திரையில் அனைவரையும் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். அவருக்கும் சாய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. சில படங்களில் ஒவ்வொரு காட்சிக்கும் முன்கூட்டியே தயாராகச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி இல்லை. காலியான மனதோடு செட்டுக்கு செல்வோம். அங்கேயே காட்சிகள் பற்றி பேசுவோம். சில சமயங்களில் வசனங்களையே மாற்றி, புதிதாக யோசித்து நடித்திருக்கிறோம். நடிகர்கள் அனைவரும் பல இடங்களில் தன்னிச்சையாகச் செய்த விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த அளவுக்கு அதிகமான காட்சிகளை இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிட திரைப்படமாக அழகாக வடிவமைத்தவர் எடிட்டர் பிரதீப். உண்மையாகவே இந்தப் படம் எடிட்டிங் மேசையில்தான் முழுமையான திரைப்படமாக உருவானது என்று நான் நம்புகிறேன். நாங்கள் டப்பிங் செய்த காட்சிகள் மட்டும் நான்கு மணி நேரத்திற்கு மேல் இருந்தன. அதை அழகாகத் தொகுத்ததற்காக பிரதீப்புக்கு என் மனமார்ந்த நன்றி.