“அன்பே டயானா” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குநர் பாரி இளவழகன், இந்த வெற்றி தனக்கானது மட்டுமல்ல; படத்திற்காக உழைத்த ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், தயாரிப்புக் குழு, ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் உரியது என்று தெரிவித்தார்.
வாழ்க்கையில் எல்லோரிடமும் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நன்றியுணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறிய அவர், இந்த மேடையில் நிற்கும் வாய்ப்பை உருவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தனித்தனி கருத்துகள் இருந்தபோதிலும், ஒரு நல்ல திரைப்படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் அளித்த ஆதரவு படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக கூறினார்.
தனது முந்தைய படமான “ஜமா” திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அளித்த ஆதரவை நினைவுகூர்ந்த அவர், ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும், பின்னர் மக்கள் மத்தியில் அந்தப் படம் சென்றடைந்தது மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார்.
“அன்பே டயானா” கதையை நடிகர் விஜய் சேதுபதியிடம் பகிர்ந்தபோது, தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுடன் இணைந்து பணியாற்ற ஊக்கமளித்ததற்காக அவருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்தார். அதேபோல், தனது எழுத்திலும் படைப்பாற்றலிலும் முழுமையான நம்பிக்கை வைத்து எந்தக் காட்சியையும் மாற்றாமல் முழுச் சுதந்திரம் வழங்கிய தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷின் ஆதரவு இந்த வெற்றிக்கான மிகப்பெரிய காரணம் என்றும் பாராட்டினார்.
கதாபாத்திரத் தேர்வில் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்ததாகக் கூறிய அவர், கோபி, ரோஜா மற்றும் ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளதாகப் பாராட்டினார். குறிப்பாக, ரசிகர்கள் “மேஜிக்” கதாபாத்திரத்தை கொண்டாடுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
படத்தின் வெற்றிக்காக உழைத்த இணை இயக்குநர்கள், தயாரிப்புக் குழு, தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் புரமோஷன் குழுவினரின் பங்களிப்பையும் அவர் நினைவுகூர்ந்தார். நேரடி படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களில் அனுமதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொண்ட பாபா மணி, படத்தின் விளம்பரப் பணிகளை அர்ப்பணிப்புடன் கவனித்த வெங்கட் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பை திறம்பட மேற்கொண்ட பி.ஆர்.ஓ. யுவராஜ் ஆகியோரின் பணியை அவர் சிறப்பாக பாராட்டினார்.
இறுதியாக, “அன்பே டயானா” திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மீண்டும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.