பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.
லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி, எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, ‘நிழல்கள்’ ரவி, அச்யுத் குமார், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலு குட்டி மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜீவன் கையாண்டிருக்கிறார். உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்வியல் பின்னணியை ஆக்சன் என்டர்டெய்னராக விவரிக்கும் இந்த திரைப்படம் – செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தினை ரசிகர்களிடம் சென்றடைவதற்காக விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில்,*
தமிழ் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. தமிழ் சினிமா – தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. இங்கு நாம் அனைவரும் 40 மதிப்பெண் எடுத்தால் போதும் அல்லது 50 மதிப்பெண் எடுத்தால் போதும். ஆனால் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று சிலர் மட்டும் தான் நினைப்பார்கள். இந்தப் படத்தின் குழு அப்படி 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது. 100 மதிப்பெண்ணிற்கு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை இந்த படக் குழு கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.
கனவுகளை காகிதத்தில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதனை இப்படி பிரம்மாண்டமான படைப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றால்… அதற்கு இந்த கதை மீது ஆர்வம் கொண்ட நம்பிக்கை வைக்கும் தயாரிப்பாளர் ஒருவர் வேண்டும். அந்த வகையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இல்லை என்றால்… எங்களின் கனவு நனவாகி இருக்காது.
இந்தப் படத்தில் நான் ஏராளமான மூத்த நட்சத்திர கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் யோகி பாபுவை ‘முருகா’ என்று தான் அழைப்பேன். அவரும் என்னை ‘முருகா முருகா’ என்றுதான் அழைப்பார். ஒரு காட்சியை அவரிடம் கொடுத்தால்… அந்த காட்சியை சிறப்பாக வடிவமைப்பதற்காக கடினமாக உழைக்கிறார். அதன் பிறகு அந்தக் காட்சி மிகச் சிறப்பானதாக மாறுகிறது. அவரிடம் எழுத்து திறமையும் இருக்கிறது. தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இயக்குநர் நல்ல பெயரை பெற வேண்டும் என்ற மனசும் இருக்கிறது. இவ்வளவு விசயங்கள் அவரிடம் இருப்பதால்… அவருக்கு தோல்வி என்பதே இல்லாமல் இருக்கிறது. அவருடைய கடுமையான உழைப்பை பார்த்து நான் பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
சர்தார் முதல் பாகத்தில் காதல் காட்சிகளை இயக்குநர் வைத்திருந்தார். சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் என்ற உடன் காதல் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஹீரோயின் மாளவிகா மோகனன் என்று சொன்னவுடன்… அவர்கள் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போன்று இருந்தார்கள். அவர்களுக்கு பயங்கரமான காஸ்டியூம் கொடுத்து.. அவர்களுடன் ரசிகர்கள் என்ஜாய் செய்வதற்கான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.இது தொடர்பாக இயக்குநரிடம் கேட்டபோது, ‘அவர் என் சாரா கதாபாத்திரம் அப்படிப்பட்டதல்ல’ என விளக்கம் அளித்தார். ஏனெனில் படத்தில் சாரா கதாபாத்திரம் எனக்கு பாஸ்.
ஆஷிகா ரங்கநாத்- மிக திறமையான டான்சர். ஆனால் இந்த படத்தில் நாங்கள் அவரை அதிகமாக ஓட வைத்திருக்கிறோம். இவர் ஒரு ஸ்டார் மெட்டீரியல். கமர்சியல் ஹீரோயின். அவர்களை அழைத்து வந்து இயக்குநர் இந்த படத்தில் ஒரு சிறந்த நடிகையாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை வேண்டுமானால் நீங்கள் தவிர்க்க முடியாமல் தொடர்ந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து பிறகு நீங்கள் இந்த படம் சொல்லும் விசயத்தை உங்களால் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் உங்களுடைய ஆரோக்கியத்தை பற்றிய அசைத்துப் பார்க்கும் உண்மையை சொல்லி இருக்கிறோம். இதுதான் படத்தில் முக்கியமான விசயம்.
மித்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு விசயம் என்னவென்றால்… எழுத்தாளர்களுக்கு மரியாதையும், மதிப்பையும் வழங்குவது. எழுத்தாளர்களுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் போது தான் ..அது அடர்த்தியானதாகவும் ரசிகர்களை உத்வேகத்துடனும் இருக்க வைக்கும். அத்துடன் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய உரையாடலை உண்டாக்கும். ஒரு படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவன் நான். அது இந்த படத்தில் இயக்குநர் மித்திரன் செய்திருக்கிறார். படம் வெளியான பிறகு இது தொடர்பான மிகப்பெரிய உரையாடல் ஏற்படும்.
எந்த பின்புலமும் இல்லாமல் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது என்பது சாதனைதான். இன்னும் அவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களுக்கு அற்புதமாக இசையமைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். சிலருக்கு வாழ்க்கை மிகப்பெரிய காத்திருப்பை வழங்குகிறது. ஆனால் வாய்ப்பை வழங்கும் போது மிகப்பெரிய அளவில் வழங்குகிறது. அதனால் இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு மிகப்பெரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தப் படத்தில் சில காட்சிகளை பார்க்கும் போதே நமக்குள் பயம் ஏற்படும். இது ரசிகர்களுக்கு அற்புதமான தொடர்பை ஏற்படுத்தி வித்தியாசமான அனுபவம் வழங்கும்.
தற்போது திருநெல்வேலியில் இருந்து ஒரு பிரஷ்ஷான வில்லன் கிடைத்திருக்கிறார். அவர் இந்த படத்தில் செய்யும் ஒவ்வொரு விசயமும் ஜாலியாகவும் இருந்தது. அவர் நடிக்கும் கேரக்டரை கேமரா முன்னால் 100% … மைக்கிற்கு முன்னால் 500% …கொண்டு வந்து விடுகிறார். அவருடைய உழைப்பு அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது.அவருடைய வாழ்க்கைப் பயணம் தான் எல்லோருக்கும் உண்மையான இன்ஸ்பிரேஷன். எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பை வேண்டுமானால் இமிடெட் செய்யலாம். ஆனால் அவருடைய எனர்ஜியை ஒருபோதும் நகலெடுக்க முடியாது.
என் அப்பாவை பற்றி ஒரு விசயத்தை யோசித்து இருக்கிறேன். இதுவரை அப்பா எனக்காக எந்த ஒரு கதையும் கேட்டதில்லை. நானே கதையைக் கேட்டு அதை தேர்வு செய்து முட்டி மோதி வரட்டும் என்று விட்டுவிட்டார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் நம்மை வழி நடத்தவில்லை என்று யோசித்தேன். அவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஒரு நாள் கூட என்ன கதை… எங்கு படபிடிப்பு.. யார் இயக்குநர்.. என்று எந்த ஒரு விவரத்தையும் என்னிடம் கேட்டதில்லை. இதுவே எனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரம் என நினைக்கிறேன்.