ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பழங்குடி கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யமான, மர்மங்கள் நிறைந்த பிரசவத்தில் தொடங்குகிறது இத்திரைப்படம். ஒரு கணவன் தன் கர்ப்பிணி மனைவியை அரவணைத்துப் பராமரிக்க, அவளோ ஒரு பயங்கரமான அரக்க உயிரினத்தைப் பெற்றெடுக்கிறாள். அந்தப் பிறப்பே பேரழிவின் தொடக்கமாக அமைகிறது. நிகழ்காலத்தில், சென்னையில் தன் மாமாவின் (லொள்ளு சபா மாறன்) பிரிண்டிங் பிரஸில் பணிபுரியும் மகி (ஜி.வி. பிரகாஷ் குமார்), வீட்டு உரிமையாளரின் கெடுபிடியால் அவசரமாக வேறு வீடு தேடும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார். அப்போது சிந்து (கயாடு லோகர்) என்ற அழகான பெண், ஒரு ஆடம்பர நட்சத்திர விடுதி போன்ற தன் பிரம்மாண்டமான அடுக்குமாடி வீட்டில் ஓர் அறையை வெறும் 5,000 ரூபாய்க்குப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறாள். குறைந்த வாடகை மற்றும் கவர்ச்சிகரமான பெண் என்பதால் எந்தவித முன்யோசனையும் இன்றி அங்கே குடியேறுகிறார் மகி. ஆரம்பத்தில் ரொமான்ஸ் அலைமோதினாலும், போகப் போக அந்த வீட்டின் மர்மங்களும் அமானுஷ்ய நிகழ்வுகளும் மகியை அச்சுறுத்தத் தொடங்குகின்றன. சிந்து சாதாரண பெண் அல்ல, மாறாக ஆயிரம் ஆண்டுகளாக மனித ரத்தத்தைக் குடித்து வாழும் ஒரு ரத்தக் காட்டேரி என்பதை மகி உணர்கிறார். அவளது மாய வலைக்குள் சிக்கிய மகி, அந்த ஆபத்தான சூழலில் இருந்து தப்பினாரா? சிந்துவின் பின்னணி என்ன என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
ஜிவி பிரகாஷ் கதை நாயகனாக நடித்திருக்கும் இது அவருக்கு ஏற்ற பாத்திரமாகவே அமைந்திருப்பதால் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். அவருக்கான வடுவமைப்பில் எந்த குறையும் இல்லை. திகில் திரைக்கதைக்கு ஏற்ப தனது உடல்மொழியை காட்டியிருக்கிறார்.
இன்றைய இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்த கயாடு லோகரை ஒரு கொடூரா விலங்காக காட்டியிருப்பதில் இயக்குனருக்கு என்ன அப்படி கோபமோ தெரியவில்லை. ஆனால் விலங்காக வருவதைவிட பல காட்சிகளில் க்ளாமர் ஊற்றெடுத்து ஓட வைக்கிறார் கயாடு.
பொதுவாக இது போன்ற பேய் படங்களில் அழகான கதாநாயகிகள் நடித்த பிறகு அவர்கள் தொடர்ந்து அது போன்ற பாத்திரங்களுக்குத்தான் அழைக்கப்படுவார்கள். அதற்கு கயாடு தயாராக இருக்கட்டும்.
படத்தில் திகில் காட்சிகள் என்பது கொஞ்சமாக இருக்கிறது. முதலில் காட்டப்படும் காட்டுவாசிகள் ஜோடி பல படங்களை நினைவு படுத்தினாலும் க்ளீன் ஷேவ் செய்து அந்த காட்டுக்குள் சுற்றுவது ஒட்டாமல் இருக்கிறது. படத்தில் வரப்போகும் மான்ஸ்டரை காட்ட அது காரணமாக அமைந்திருக்கிறது என்பதைத்தவிர வேறு ஒரு வேளை இல்லை.
டி. எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், ஆகியோர் கொடுத்த வேளையை சரியாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் மாரியப்பன் சின்னா இன்னும் திரைக்கதையில் சுவராஸ்யம் சேர்த்திருக்கலாம். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்; இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இம்மார்டல் – திகில்
இமார்ட்டல் – விமர்சனம்