KollywoodNow

Tamil CInema Updates

ஐ ஆம் கேம் – விமர்சனம்

ஒரு மனிதனின் உடலில் வேறொருவரின் கை பொருத்தப்படுகிறது. ஆனால், அந்த கை அவனது கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படத் தொடங்குகிறது. அதுவும் குறிப்பிட்ட ஒருவரை கொலை செய்ய அந்த கை துடித்தால் என்ன நடக்கும்?** இந்த வித்தியாசமான ஐடியாவை ஆக்ஷன், மிஸ்டரி மற்றும் ரிவெஞ்ச் பின்னணியில் சொல்ல முயன்றிருக்கும் படம்தான் ‘ஐ ஆம் கேம்’.
நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ளார். கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தனது தந்தையின் உதவியுடன் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் டான் ஜான் (துல்கர் சல்மான்). தொழிலில் ஏற்படும் நஷ்டம் காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகரிக்க, பெற்றோரிடம் சண்டையிட்டு பணத்தை வாங்குகிறார். அந்தப் பணத்தை வைத்து கடனை அடைத்து பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்குப் பதிலாக, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். ஆரம்பத்தில் சாதகமாக செல்லும் சூதாட்டம், இறுதியில் அவரிடம் இருந்த மொத்த பணத்தையும் இழக்கச் செய்கிறது. இதனால் ஆத்திரமடையும் டான் ஜான், சூதாட்ட கிளப்பில் தகராறு செய்து பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.
அவரை கிளப்பைச் சேர்ந்தவர்கள் விரட்டிச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்தில் அவரது இடது கை கடுமையாக சேதமடைகிறது. அதே நேரத்தில் மற்றொரு விபத்தில் சிக்கிய இளைஞரின் கை, டான் ஜானுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. அந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது.
புதிதாக பொருத்தப்பட்ட கை, கொஞ்சம் கொஞ்சமாக டான் ஜானின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படத் தொடங்குகிறது. அவர் நினைப்பதை அந்த கை செய்வதில்லை. மாறாக, அந்த கை என்ன செய்ய நினைக்கிறதோ அதைத் தடுக்க முடியாமல் டான் ஜான் போராட வேண்டிய நிலை உருவாகிறது. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொழிலதிபரான டேவிட் ஆபிரகாமை (மிஷ்கின்) கொலை செய்யவும் அந்த கை முயற்சிக்கிறது. அதன்பிறகுதான் படத்தின் பிரதான மர்மம் தொடங்குகிறது. டான் ஜானுக்கு பொருத்தப்பட்ட கை யாருடையது? அதன் பின்னணி என்ன என்பதை திகிலும் பரபரப்பையும் வைத்து திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் நவாஸ் ஹிதாயத்
நாயகன் துல்கர் சல்மான் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது உடலிலிருக்கும் ஒரு கை தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் இயங்குவதை சிறப்பாக காட்டியிருக்கிறார். பல காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டைப் பெறுகிறது. அதனால் துல்கர் சல்மானுக்கு இந்தப்படம் இன்னொரு ஹிட்.
டேவிட் ஆபிரகாம் பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் கண்களும் நடிப்பில் பங்கெடுத்திருக்கிறது. நல்ல கதை. விறு விறு திரைக்கதை படம் வேகமெசுத்துச் செல்கிறது. ஆனாலும் நீளத்தை குறைத்திருக்கலாம்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
ஐ ஆம் கேம் – விறு விறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *