வித்தியாசமாக கதை சொல்லும் போக்கை வைத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த முறையும் வித்தியாசமான ஆனால் சர்ச்சையான கதையை கையில் எடுத்து வந்திருக்கிறார்.
90-களின் கிராமத்து வாழ்வியலைக் களமாகக் கொண்டு, சாதி ஆதிக்கம், ஆணாதிக்க மனநிலை, வன்முறை, வகுப்புவாதம் என சமூகத்தின் இருண்ட பக்கங்களை கதையின் வழியாகப் பதிவு செய்கிறது ‘டோரத்தி’.
சிறுவயதில் புரூஸ் லீயின் தீவிர ரசிகனாக இருக்கும் சுப்பு (சனந்த்), தனது நண்பன் கார்த்தியை (ரிஷிகாந்த்) உள்ளூர் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுவதன் மூலம் இருவரது நட்புக்கான அடித்தளம் உருவாகிறது. ஆனால், சுப்புவின் குடும்பச் சூழல் முற்றிலும் வேறுபட்டது. அங்கு ஆண்மை என்பது தாடி, மீசை, முரட்டுத்தனம், அதிகாரம் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையாகப் பார்க்கப்படுகிறது.
சுப்புவின் தந்தை (முத்துக்குமார்) மற்றும் சகோதரர்கள் வாழும் அந்த உலகில் வன்முறை என்பது அசாதாரணமான ஒன்றாகத் தெரியவில்லை. மாறாக, அது குடும்பத்தின் கௌரவத்தையும் ஆணாதிக்க அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே பார்க்கப்படுகிறது.
தந்தையின் அரவணைப்பின்றி தாயின் பராமரிப்பில் வளர்ந்த கார்த்தி, சுப்புவின் துணிச்சலை ரசிப்பதுடன், அவனது குடும்பத்தின் முரட்டுத்தனத்தையும் ஒரு கட்டத்தில் வியப்புடன் பார்க்கிறான். ஆனால் சாதியின் பெயரில் சுப்புவின் தந்தை கார்த்தியை அவமதிக்கும் போதிலும், சிறுவயது நட்பு மட்டும் முறிவதில்லை.
காலம் இருவரையும் வெவ்வேறு மனிதர்களாக மாற்றுகிறது. சிறுவயதில் துணிச்சலின் அடையாளமாகத் தெரிந்த சுப்பு, வளர்ந்த பிறகு வேறொரு முகத்தைப் பெறுகிறான். அதே நேரத்தில் அமைதியானவனாக இருந்த கார்த்தியின் குணமும் மாறுகிறது. இந்த இரு நண்பர்களின் மாற்றம்தான் கதையின் முக்கியமான முரண்பாடுகளில் ஒன்றாக மாறுகிறது.
இந்தச் சூழலில் சுப்புவின் அண்ணனுக்குத் திருமணம் நடைபெறுகிறது. கேரளாவிலிருந்து மருமகளாக வரும் டோரதி (கீர்த்தி சுரேஷ்), அந்தக் குடும்பத்தின் வழக்கமான ஆணாதிக்கச் சூழலுக்குள் முற்றிலும் மாறுபட்ட மனிதநேயத்தை கொண்டு வருகிறார்.
தாயன்புக்காக ஏங்கும் சுப்புவுக்கு, டோரதியின் வருகை ஒரு புதிய உணர்வுலகைத் திறக்கிறது. அவனது முரட்டுத்தனத்துக்குப் பின்னால் இருக்கும் குழந்தைத்தனத்தையும் மென்மையையும் புரிந்துகொள்ளும் நபராக டோரதி மாறுகிறார். ஆனால் இந்த உறவு சுப்புவின் தந்தைக்கும் கார்த்திக்கும் ஏற்புடையதாக இல்லை.
இதனால் உருவாகும் மோதல்களும், அதன் விளைவாக சுப்பு–கார்த்தி நட்பு எதிர்கொள்ளும் மாற்றங்களும்தான் படத்தின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.
தனது முதல் படைப்பிலிருந்தே தனக்கென ஒரு தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கும் கார்த்தி சுப்புராஜ், ‘டோரத்தி’யிலும் அதே முத்திரையைப் பதித்திருக்கிறார். கிராமம், மனிதர்கள், உறவுகள், அதிகாரம் என ஒவ்வொரு அம்சத்தையும் கதையின் போக்கோடு இணைத்துச் செல்கிறார்.
திரைக்கதையில் ஆங்காங்கே சில தடுமாற்றங்கள் இருந்தாலும், பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் படம் பின்தங்கவில்லை. குறிப்பாக, கதாபாத்திரங்களின் இயல்பான மாற்றங்களும், அவர்களுக்கு இடையிலான உறவுகளில் ஏற்படும் விரிசல்களும் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.
முதல் ஃப்ரேமிலேயே பார்வையாளர்களைத் தனது உலகத்திற்குள் அழைத்துச் செல்லும் ‘டோரத்தி’, மனித உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் அன்பையும் வன்முறையையும் முரண்பாடுகளையும் பேசும் படைப்பாக நிற்கிறது.
‘டோரத்தி’யின் கதையைத் தாங்கி நிற்கும் முக்கியமான அம்சம் சுப்பு–கார்த்தி இருவருக்கிடையேயான நட்புதான். இருவரும் உரையாடிக்கொள்ளும் விதத்திலும், ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் உரிமையிலும் நீண்ட காலப் பழக்கமும் நெருக்கமும் இயல்பாகப் பதிவாகிறது. அதனாலேயே ஒரு கட்டத்தில் கார்த்தி துப்பாக்கியை சுப்புவை நோக்கி உயர்த்தும் காட்சி பார்வையாளர்களுக்குள் பதற்றத்தை உருவாக்குகிறது. நண்பனின் மீது அவனால் துப்பாக்கியை இயக்க முடியுமா, இல்லை அந்த நெருக்கம் அவனது முடிவையே மாற்றிவிடுமா என்ற எதிர்பார்ப்பு கதையின் அடுத்த நகர்வை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
சனந்த் ஏற்றிருக்கும் சுப்பு கதாபாத்திரம் அவருக்கு நடிப்பை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்களை வழங்குகிறது. கதையின் முக்கியமான தருணங்களில் கதாபாத்திரத்தின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தனது நடிப்பை மாற்றியமைத்திருக்கிறார். உணர்ச்சிகளை மிகைப்படுத்தாமல், தேவையான இடங்களில் அழுத்தமாக வெளிப்படுத்தியிருப்பது அவரது நடிப்பின் சிறப்பு.
கார்த்தி கதாபாத்திரத்தில் வரும் உள்மனப் போராட்டத்தையும் ரிஷிகாந்த் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். நண்பன் மீதான அன்புக்கும், அவனைச் சுற்றி உருவாகும் சூழலால் ஏற்படும் அச்சத்துக்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் ஒரு மனிதனின் நிலையை அவரது நடிப்பு நம்பகத்தன்மையுடன் கடத்துகிறது.
கீர்த்தி சுரேஷ் ஏற்றிருக்கும் டோரதி கதாபாத்திரம் கதைக்குள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பது படத்தின் சுவாரஸ்யமான பகுதிகளில் ஒன்று. அவரது கதாபாத்திரத்தின் முழுப் பின்னணியையும் முன்கூட்டியே சொல்லிவிடாமல், திரையில் அது எவ்வாறு விரிகிறது என்பதைப் பார்ப்பதே சிறந்த அனுபவமாக இருக்கும்.
சாதி ஆணவத்தையும் அதன் தாக்கத்தையும் மையமாகக் கொண்ட படங்களில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் சில காட்சிகளையும் சூழல்களையும் இங்கும் பார்க்க முடிகிறது. இருப்பினும், ஒரு மனிதனின் சமூக அடையாளத்தையும், அந்த அடையாளத்தைக் கடந்து உருவாகும் நட்பையும் கதையின் முக்கியப் புள்ளியாக மாற்றியிருப்பது ‘டோரத்தி’யை தனித்துக் காட்டுகிறது.
இறுதிக்கட்டமும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது. ஒரு சம்பவத்தின் முடிவை மட்டும் பதிவு செய்யாமல், படம் முழுவதும் முன்வைத்த மனித உறவுகள் மற்றும் சமூக அடையாளம் குறித்த கேள்விகளுக்கு ஒரு அழுத்தமான நிறைவை வழங்குகிறது கிளைமாக்ஸ்.
எஸ். திருவின் ஒளிப்பதிவு, படத்தின் கதைக்களத்தில் நிலவும் பதற்றமான சூழலை காட்சிகளின் வழியாக அழுத்தமாக உணரச் செய்கிறது. காட்சிகளின் மனநிலைக்கு ஏற்றவாறு இளையராஜாவின் இசையும் துணை நிற்கிறது. குறிப்பாக உணர்வுகள் அதிகம் வெளிப்படும் தருணங்களில் அவரது இசை காட்சிகளின் தாக்கத்தை மேலும் கூட்டுகிறது.
கதையில் ஏற்படும் முக்கியமான திருப்பங்களை உடனடியாக வெளிப்படுத்தாமல், அவற்றை பொறுமையாகக் கட்டமைத்து பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து தக்கவைத்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பு.
டோரத்தி – திரைப்பட விமர்சனம்