KollywoodNow

Tamil CInema Updates

ஸ்வேன் அகாடமி லோகோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

திரை எழுத்தாளர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN),ஐபி கிளைம்ப் உடன் இணைந்து இணைந்து ஸ்வேன் அகாடமியை சென்னையில் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்ற ஸ்வேன் அமைப்பின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சேரன், ஸ்வேன் அகாடமியின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்.

ஸ்வேன் அகாடெமி தொடக்கத்தை முன்னிட்டு, ஸ்வேன் மற்றும் ஐபி கிளைம்ப் இணைந்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரை எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்றனர்.

கதை உருவாக்கம், திரைக்கதை எழுதும் நுணுக்கங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த கருத்தரங்குகள் மற்றும் ஆழமான கலந்துரையாடல்கள் இதில் இடம்பெற்றன.

விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எழுத்துப் பயணத்தின் அனுபவங்களையும், திரைக்கதை உருவாக்கம் தொடர்பான முக்கியமான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வேன் அகாடமியின் லோகோ மற்றும் பாடத்திட்டத்தை அவர் வெளியிட்டார்.

வளர்ந்து வரும் கதைசொல்லிகள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் ஸ்வேன் அகாடமி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வின் முக்கிய அம்சமாக, ஐபி கிளைம்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நவீன கதைசொல்லல் குறித்த விரிவான புரிதலை வழங்கும் வகையில் பல்வேறு சிறப்பு அமர்வுகளும் நடைபெற்றன. பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி, நவீன கதை சொல்லலில் உருவாகி வரும் புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகள் மற்றும் கதை இயக்கவியல் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 916 ஸ்டூடியோ சார்பில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில், தற்போது வேகமாக வளர்ந்து வரும் வெர்ட்டிக்கல் ஷார்ட் பார்ம் டிராமா வடிவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை, மலையாள எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அனுராஜ் மனோகர், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி படைப்பாளர்கள் பல்வேறு முக்கிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். திரைக்கதை எழுத்தின் நுட்பங்கள், நவீன கதைசொல்லல் முறைகள், டிஜிட்டல் காலகட்டத்தில் எழுத்தாளர்களுக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் விரிவாகப் பேசப்பட்டது.

நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், சேரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரக்கனி மற்றும் சினேகன் உள்ளிட்ட மூத்த படைப்பாளிகளின் தலைமையில் செயல்பட்டு வரும் ஸ்வேன் அமைப்பு, தென்னிந்திய சினிமாவில் திரை எழுத்துக்கான முறையான கல்வி மற்றும் பயிற்சி கட்டமைப்பை உருவாக்குவதிலும், எழுத்தாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஸ்வேன் அகாடமியின் தொடக்கம், தென்னிந்திய திரைக்கதை எழுத்தாளர்களின் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கும், அவர்களின் படைப்பாற்றலுக்கு உரிய வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் வழங்குவதற்குமான முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *