KollywoodNow

Tamil CInema Updates

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’

பாலாஜி – மதுமிதா நடிப்பில், சசி மாஸ்டர் இயக்கம் மற்றும் நடன அமைப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடலின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தமிழ் இசை உலகில் புதுமையான முயற்சியாக உருவாகியுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல், படக்குழு தெரிவித்தபடி, லண்டனில் முழுமையாக படமாக்கப்பட்ட முதல் ஆல்பம் பாடல் என்ற சிறப்புடன் உருவாகியுள்ளது. இந்தப் பாடலில் பாலாஜி மற்றும் மதுமிதா ஜோடியாக நடித்துள்ளனர்.

பிரபல நடன இயக்குநர் சசி மாஸ்டர் இந்தப் பாடலை இயக்கியதுடன், நடன அமைப்பையும் மேற்கொண்டுள்ளார். பாடலுக்கு AJ இசையமைத்துள்ளார். பாடலை G.V. பிரகாஷ் மற்றும் ஸ்னேகா இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை K.U. கார்த்திக் எழுதியுள்ளார். இந்த ஆல்பம் பாடலின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. வடபழனியில் உள்ள பிரசாத் லேப் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ‘பூகி பொன்னம்மா’ பாடல் குழுவினருடன், திரையுலகம் மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ‘பூகி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் குழுவினர் தங்களது அனுபவங்களையும், பாடல் உருவான விதம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பாலாஜி திருமால் பேசியதாவது..,
“பூக்கி பொன்னம்மா” பாடலின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பானதும், உணர்வுப்பூர்வமானதுமாக இருக்கிறது. இவ்வளவு பேர் என்னை ஆதரிப்பதற்காக இங்கு வந்து நிற்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பொதுவாக தனியாகவே இருப்பவன். ஆனால் இந்தப் பயணத்தில் மாஸ்டர் உள்ளிட்ட பலரும் எனக்கு கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. முதலில் UK-ல் மாஸ்டர் மற்றும் நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது, மீடியாவுக்குள் வர வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மாஸ்டரிடம் கேட்டேன். “சரி, ஏதாவது திட்டமிடலாம்” என்று சொன்னவர், மறுநாளே அழைத்து ஒரு பாடல் செய்யலாம் என்று கூறினார். அதுதான் என்னுடைய முதல் பாடல். உண்மையில் எனக்கு நடனம் ஆடிய அனுபவமே இல்லை. பள்ளி, கல்லூரி என எந்தக் காலத்திலும் நான் நடனம் ஆடியதில்லை. இதுதான் முதல் முறையாக நடனம் ஆடியிருக்கிறேன். அதற்காக மாஸ்டருக்கு மனமார்ந்த நன்றி. மதுமிதாவுக்கும் என்னுடைய சிறப்பு நன்றி. புதிதாக ஒருவர் வரும்போது அவருடன் இணைந்து நடிப்பதையும், அவரை ஏற்றுக்கொள்வதையும் எல்லோரும் எளிதாகச் செய்ய மாட்டார்கள். ஆனால் மதுமிதா என்னை மிகவும் இயல்பாக ஏற்றுக்கொண்டு நடித்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். இசையமைப்பாளர் AJ முதல் டியூனையே கொடுத்தபோது எங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்துவிட்டது. அதில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் அதையே பாடலாக உருவாக்கினோம். பின்னர் கார்த்திக் பிரதருடன் இணைந்து பாடல் வரிகள் உருவானது. சிறிய அளவில் சில மாற்றங்கள், டியூனிங் இருந்தாலும் பாடல் வளர்ந்த விதத்தில் நாங்கள் மிகவும் திருப்தியாக இருந்தோம். முதலில் மாஸ்டரிடம், “பாட்டு கொஞ்சம் சுலபமாக இருக்கட்டும்; அப்போதுதான் என்னால் ஆட முடியும்” என்று கேட்டேன். ஆனால் போகப்போக பாடலின் வேகம் அதிகமாகிவிட்டது. ஹூக் ஸ்டெப் எல்லாம் வரும்போது இதையெல்லாம் நம்மால் செய்ய முடியுமா என்று நினைத்தேன். ஆனால் இரண்டு வாரங்கள் தொடர்ந்து பயிற்சி கொடுத்து என்னை ஆட வைத்தார்கள். மாதேஷ் பிரதர் மிகவும் சிறப்பாக பயிற்சி கொடுத்தார். சென்னை வந்த பிறகும் தினமும் என்னை அழைத்துச் சென்று பல விஷயங்களைப் பயிற்சி செய்ய வைத்து வருகிறார். அந்த அளவுக்கு தனிப்பட்ட அக்கறையுடன் எனக்காக உழைத்ததற்கு மாதேஷ் பிரதருக்கும், எடிட்டர் பிரதருக்கும் மனமார்ந்த நன்றி.

இந்தப் பாடலை நான் சினிமாவுக்குள் என்னுடைய அறிமுகத்திற்காகவே செய்திருக்கிறேன். நான் திரையுலகிற்குள் வருகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காகத்தான் இந்தப் பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்தினோம். மிக விரைவில் நாங்கள் ஒரு திரைப்படம் செய்ய இருக்கிறோம். அதுகுறித்த அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். இங்கு வந்து என்னை வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னைப் பற்றிச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நான் பிறந்தது அசோக் நகரில். என்னுடைய அப்பா திரைப்படத் தயாரிப்பாளர். ‘நூறாவது நாள்’, ‘24 மணி நேரம்’ உள்ளிட்ட பல படங்களை அவர் தயாரித்திருக்கிறார். ஆனால் நான் மீடியாவுக்குள் வரக்கூடாது என்பதற்காக என்னுடைய அம்மா என்னை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்தார். சுமார் பத்து ஆண்டுகளாகவே சினிமா மற்றும் மீடியாவுக்குள் வர வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை எனக்குள் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் குடும்பம், பெற்றோர் என சில பொறுப்புகள் இருக்கின்றன. என்னுடைய அப்பா 1999-ஆம் ஆண்டிலேயே காலமானார். வீட்டில் ஒரே மகன் என்பதால் முதலில் குடும்பத்திற்கான வாழ்க்கைப் போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. அதே நேரத்தில் என்னுடைய சினிமா மீதான ஆர்வத்தை மட்டும் நான் விட்டுவிடவில்லை. இப்போது அந்தப் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். நிச்சயம் தொடர்ந்து முயற்சி செய்வேன். இங்கு நண்பர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பேர் வந்து என்னை ஆதரிப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். அனைவருக்கும் மீண்டும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *