KollywoodNow

Tamil CInema Updates

ரசிகர்களின் அன்பு எனக்கு பொறுப்பை கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்

ஒரு நடிகருக்கு கிடைக்கும் உண்மையான விருதுகள் ரசிகர்களின் பாராட்டுகள் தான். கதாநாயகனோ வில்லனோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது ரசிகர்களின் பாராட்டுக்கள் தான். அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் முத்துக்குமார் சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார்.

படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தனக்குக் கிடைத்து வரும் அன்பு குறித்து முத்துக்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “நடிகர்கள் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும், அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை ரசிகர்கள் தருவார்கள். ‘டோரதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்து வரும் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி. ‘டோரதி’ படப்பிடிப்பின்போதே, கார்த்திக் சுப்புராஜிடம், ‘உங்களுடைய பத்து படங்களிலேயே இந்தப் படம்தான் சிறந்த படமாக இருக்கும்’ என்று கூறினேன்.

ஆரம்பத்தில், இப்படத்தில் சகோதரர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் என்னைத் தேர்வு செய்திருந்தார்கள். ஆனால், ‘விசில் வீரய்யா’ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டபடியே அந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது.

விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. இந்தக் கதாபாத்திரத்திற்காக என் தோற்றத்தை மாற்றிய மும்பையைச் சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் உட்பட, எனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்தவரும் அன்பு பொறுப்பையும், ரசிகர்களை திருப்திப்படுத்தும் கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்துள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *