KollywoodNow

Tamil CInema Updates

விதிகளை மீறும் ருத்ரா கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமானது”- நடிகை ராதிகா ஆப்தே!

வசீகரிக்கும் தோற்றம், யாராலும் எளிதில் கணிக்க முடியாத நடவடிக்கை என வலம் வரும் ருத்ரா பல தலைமுறைகளாகப் பெண்களின் ஆதிக்கத்தில் இருந்து வரும் பெர்னூரு நகருக்குள் நுழைகிறாள். மற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கட்டிக்காத்து வந்த அதிகார அமைப்பைப் பற்றியோ, அதன் விதிமுறைகளைப் பின்பற்றுவது பற்றியோ அவளுக்குக் கவலையில்லை. ‘ஃபோபியா’, ‘அந்தாதுன்’, ‘ஸ்கேர்ட் கேம்ஸ்’, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ராதிகா ஆப்தே, இதுவரை தான் ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரமாக ருத்ராவைக் சொல்கிறார்.

“தான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளால் தனக்கான அடையாளம் தீர்மானிக்கப்படுவதை ருத்ரா ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள். அவள் துணிச்சலானவள், லட்சியவாதி,ஏற்கெனவே இருக்கும் அதிகார அமைப்பையே எதிர்த்துக் கேள்வி கேட்கத் தயங்காதவள். அதனால்தான் அவளுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமானது” என்கிறார் ராதிகா.

ருத்ரா மற்றும் கீர்த்தி சுரேஷின் பவானி கதாபாத்திரம் என இருவருக்கும் இடையிலான மோதலை டிரெய்லர் முன்னிறுத்துகிறது. இருப்பினும், இந்த மோதலை வெறுமனே அதிகாரத்தை அடைவதற்கான போட்டியாக ராதிகா பார்க்கவில்லை. “‘அக்கா’ தொடரில் நான் மிகவும் ரசித்த விஷயம் என்னவென்றால், இங்கு மோதல் என்பது யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது மட்டுமல்ல. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்கும் வெவ்வேறு நம்பிக்கைகள், விசுவாசங்கள் மற்றும் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமான விஷயங்களும் இந்த மோதலுக்குக் காரணமாக இருக்கின்றன” என்கிறார்.

எது சரி, எது தவறு என்ற வழக்கமான வரையறைகளின் அடிப்படையில் ருத்ரா செயல்படுவதில்லை. மாறாக, தனது நம்பிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்பச் செயல்படுகிறாள். கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் ருத்ரா. இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மோதலே தொடரின் மையக்கருவாக அமைகிறது.

தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள ‘அக்கா’ தொடரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஆதித்யா சோப்ரா, யோகேந்திர மோக்ரே மற்றும் அக்ஷய் விதானி ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். ராதிகா ஆப்தே, கீர்த்தி சுரேஷ், தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்ட பலர் இத்தொடரில் நடித்துள்ளனர்.

வசனங்களை ஹுசைன் தலால் மற்றும் அப்பாஸ் தலால் எழுதியுள்ளனர். ஜான் ஸ்டீவர்ட் எடுரி இசையமைத்துள்ளார். சங்க்யுக்தா காஸா மற்றும் சாஹீப் பாக்சி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். லக்ஷ்மி கேலுஸ்கர் தயாரிப்பு வடிவமைப்பையும், ஷீட்டல் இக்பால் ஷர்மா ஆடை வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். சண்டைக் காட்சிகளை சுனில் ரோட்ரிக்ஸ் வடிவமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *