கேரள – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப் பிரதேசத்தின் பின்னணியில் விரிகிறது கதை. அங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஹிருதய் என்ற சிறுவன் திடீரென மாயமாகிறான். அவனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரி ராவ் (சஞ்சனா நடராஜன்) விசாரணையில் இறங்குகிறார். இதற்கிடையே, அடையாளம் காண முடியாத நிலையில் கிடைக்கும் ஒரு சடலம் தொடர்பான வழக்கை கேரள காவல்துறை அதிகாரி சந்துரு (அர்ஜுன் தாஸ்) விசாரிக்கத் தொடங்குகிறார்.
இரு மாநிலங்களின் காவல்துறையினர் தனித்தனியாக மேற்கொள்ளும் இந்த விசாரணைகள், ஒரு கட்டத்தில் ஒன்றையொன்று சந்திக்கின்றன. உயிருடன் மீட்கப்படும் சிறுவன் தனது கடந்த கால நினைவுகளை முற்றிலுமாக இழந்து, கேபிரியேல் என்ற புதிய அடையாளத்துடன் வாழ்வதற்கான காரணம் என்ன? அவனது உண்மையான பின்னணி என்ன? அடையாளம் தெரியாத சடலத்துக்கும் சிறுவனின் மறைந்துபோன வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? என அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பி, பார்வையாளர்களின் கவனத்தைத் திரையில் கட்டிப்போடுகிறது திரைக்கதை.
குற்றப் புலனாய்வை மையமாகக் கொண்ட கதையில், மர்மத்தைத் தக்கவைத்துக்கொள்வதும், ஒவ்வொரு தகவலாகத் திறந்து கதையின் பின்னணியை உணர்த்துவதும் முக்கியமானவை. அந்த வகையில், பரபரப்பான காட்சிகளையும் திடீர் திருப்பங்களையும் மட்டுமே நம்பியிருக்காமல், கதாபாத்திரங்களின் பின்னணியையும் உணர்வுகளையும் இணைத்து ஒரு விசாரணைத் திரில்லரை உருவாக்க முயன்றிருக்கிறது ‘ஜான் டோ’.
வழக்கமான மசாலா சினிமாவின் சமரசங்கள் இல்லாமல், யதார்த்தமான களமும் நிதானமான கதை சொல்லல் முறையும் கொண்ட மலையாளத் திரைப்படங்களின் பாணியை விரும்புபவர்களுக்கு ‘ஜான் டோ’ ஒரு கவனிக்கத்தக்க படைப்பு. மர்மம், புலனாய்வு, மனித உணர்வுகள் ஆகிய மூன்றும் கலந்த தரமான கிரைம் த்ரில்லர் அனுபவத்தைத் தேடுபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.