KollywoodNow

Tamil CInema Updates

அறிவின் புதிய இசை ஆல்பம் ‘ஹலோ’

‘ஹலோ’ (HELLO) இசை ஆல்பத்தில் தெருக்குறல் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் கூல் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல், அறிவின் இசைப் பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது!

சமூக அக்கறை கொண்ட கருத்தாழமிக்க பாடல்கள், வலிமையான வரிகள் மற்றும் தனித்துவமான இசைப் படைப்புகள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள சுயாதீன தமிழ் இசைக் கலைஞர் தெருக்குறல் அறிவு, தனது புதிய இசை ஆல்பமான ‘ஹலோ’ (HELLO) மூலம் முற்றிலும் மாறுபட்டதொரு களத்தில் பயணித்துள்ளார்.

‘HELLO’ பாடலை தெருக்குறள் அறிவு எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். ஒருவரை முதன்முதலில் சந்திக்கும் தருணத்தில் ஏற்படும் உற்சாகம், மெல்ல மலரும் காதல் உணர்வுகள், மனதுக்கு நெருக்கமான ஒருவரைக் கண்டறிவதால் ஏற்படும் மகிழ்ச்சி என காதலின் அழகான உணர்வுகளை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

வாழ்க்கையில் மறக்க முடியாத பல உறவுகள் மிகவும் எளிமையான தருணங்களிலிருந்தே தொடங்குகின்றன. ஒரு சாதாரண வணக்கம், எதிர்பாராத சந்திப்பு அல்லது சில நிமிட உரையாடல் கூட அழகான காதல் கதையின் தொடக்கமாக மாறலாம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு ‘ஹலோ’ (HELLO) உருவாக்கப்பட்டுள்ளது.

‘HELLO’ பாடல் உருவான விதம் குறித்து தெருக்குறல் அறிவு கூறியதாவது:

“காதல் என்பது மனிதர்களை இணைக்கும் மிக அழகான உணர்வு. அவர்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும் காதல் அனைவரையும் இணைக்கிறது. ஒரு கலைஞனாக, வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளையும் அனுபவங்களையும் இசை பிரதிபலிக்க வேண்டும் என்று எப்போதும் நம்புகிறேன். என்னுடைய பல பாடல்கள் சமூகச் சிந்தனைகளையும், வாழ்க்கையின் யதார்த்தங்களையும் பேசியிருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு, அனைவருக்கும் நெருக்கமான ஒரு எளிமையான உணர்வை ‘ஹலோ’ (HELLO) மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். சில நேரங்களில் ஒரு சிறிய வணக்கம் கூட அழகான உறவின் தொடக்கமாக மாறிவிடும். காதலில் விழும் தருணங்கள், அதனால் ஏற்படும் மகிழ்ச்சி, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகள் என அனைத்தையும் இந்தப் பாடல் கொண்டாடுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய காதல் கதையின் ஒரு சிறிய பகுதியையாவது இதில் கண்டடைவார்கள் என்று நம்புகிறேன்.”

இந்த இசை ஆல்பத்தில் தெருக்குறல் அறிவுடன் இணைந்து அஸ்வதி நடித்துள்ளார். இருவரின் திரைத் தோற்றமும், இயல்பான நடிப்பும் காதல் கதையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகின்றன.

இசையின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் காட்சிகளை வடிவமைத்து, அருள் கூல் இந்த ஆல்பத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். இயல்பான நடிப்பு, நெருக்கமான தருணங்கள் மற்றும் அழகான காட்சியமைப்புகள் மூலம் பாடலின் உணர்வுகளை மேலும் மெருகேற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *