.கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா, லைட்பாக்ஸ் மீடியா ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சந்தீப் குன்னம், ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர். துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதிஹாசன், ருஹானி சர்மா, நாசர், கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கல்பனா (சாத்விகா வீரவல்லி) ஒரு கிராமத்துப் பெண். சிறு வயதிலிருந்தே விண்வெளி குறித்த ஆர்வமும், ஒருநாள் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தீவிர ஆசையும் கொண்டவர். ஆனால், அவர் வாழும் சூழலும் குடும்பத்தினரின் கட்டுப்பாடுகளும் அந்த ஆசைக்கு வாய்ப்பளிக்கவில்லை. பள்ளிப் படிப்பை முடித்த கையோடு திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுகிறார்.
கிருஷ்ணாவை (துல்கர் சல்மான்) மணந்த பிறகு கல்பனாவின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் நிகழ்கிறது. மனைவியின் மனதில் புதைந்திருக்கும் கனவை அறிந்த கிருஷ்ணா, அதைச் சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளில் அவருக்குத் தோள் கொடுக்கிறார். இந்த முயற்சிகள் அவர்களை எத்தகைய சோதனைகளுக்கு உள்ளாக்குகின்றன? கல்பனையின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதா? என்பதைக் கூறுகிறது படத்தின் தொடர்ச்சி.
கல்பனையின் சிறுவயதுக் கனவு, அதைத் தொடர முடியாமல் போகும் குடும்பச் சூழல், திருமணத்திற்குப் பிறகு கிடைக்கும் புதிய வாய்ப்பு என முதல் பாதி உணர்வுகளின் அடிப்படையில் பயணிக்கிறது. ஒரு கிராமத்துப் பெண்ணின் விண்வெளி லட்சியத்தை மையமாகக் கொண்ட கதையில், அவரது பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும் கணவன் கதாபாத்திரம் அழுத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனைவியின் ஆசைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு மதிப்பளிக்கும் கிருஷ்ணா, கதையின் முக்கியமான பலமாக இருக்கிறார்.
இரண்டாம் பாதியில் கல்பனையின் இலக்கை நோக்கிய பயணம் கதைக்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. இந்தக் கட்டத்தில் ரோஹிணியாக வரும் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் கதையின் நகர்வுக்கு உதவுகிறது. படிப்பு, அறிவியல் தேடல், விண்வெளி சார்ந்த வாய்ப்புகள் எனக் கதை விரிவடைகிறது. இறுதிப் பகுதியில் இடம்பெறும் காட்சிகள் பார்வையாளர்களிடம் நம்பிக்கையையும் உணர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
துல்கர் சல்மானைப் பொறுத்தவரை, கிருஷ்ணா கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். மனைவியின் கனவை மதிக்கும் கணவனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதையின் மையம் கல்பனாவாக இருந்தாலும், தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
கல்பனாவாக நடித்துள்ள சாத்விகா வீரவல்லி, கதாபாத்திரத்தின் பல்வேறு மனநிலைகளைத் தனது நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தனது கனவை அடைவதற்காகப் போராடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். ஸ்ருதிஹாசன், ருஹானி சர்மா, நாசர், ஸ்வாசிகா உள்ளிட்டோரும் கதையின் தேவைக்கேற்ப நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைக்குப் பக்கபலமாக இருக்கிறது. காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கும் வகையில் பின்னணி இசையும் அமைந்துள்ளது. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில் கிராமப்புறக் காட்சிகளும் விண்வெளி சார்ந்த காட்சிகளும் அழகாக விரிகின்றன. பிரவீன் கே.எல்.வின் படத்தொகுப்பும் தயாரிப்பு வடிவமைப்பும் படத்தின் உருவாக்கத்துக்குத் துணை சேர்க்கின்றன.
ஒரு பெண்ணின் வாழ்க்கை திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை; அவளுக்கென்று தனிப்பட்ட கனவுகளும் இலக்குகளும் இருக்கின்றன. அவற்றை உணர்ந்து மதிக்கும் குடும்ப உறவுகள் அமைந்தால் சாதனைகளுக்கான பாதை திறக்கும் என்ற கருத்தை முன்வைக்கிறது
மிகச்சிறந்த கதை அமைப்புடன் வந்திருக்கும் ஆகயத்தில் ஒரு தாமரை நடுத்தர எளிய குடும்பத்துப் பெண்களுக்கு சாதிக்க நம்பிக்கைக் கொடுக்கிறது.
ஆகாயத்தில் ஒரு தாரகை – விமர்சனம்