இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
நடிகர் சத்யராஜ், “எம்.ஜி.ஆர். அய்யா மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான் வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய பாக்கியம். இதற்காக விஜய் ஆண்டனி, தனஞ்செயன், விஜய் மில்டன் மூவருக்கும் நன்றி. நல்லவேளை நான் முடியில்லாமல் பிறந்தேன். இதனால்தான் எனக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. கட்டப்பா கிடைத்ததும் அப்படித்தான். சில மைனஸ்தான் பிளஸ். கடவுளுக்கு என்னைப் பிடிக்கும். ஏனெனில், அவரை நான் டிஸ்டர்ப் செய்வதில்லை. எல்லோரையும் போல, ‘என் படம் வெற்றி பெற வேண்டும், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும்’ என்று கெடுபிடி போட மாட்டேன். மற்றப் படங்களைப் போல அல்லாமல், நிஜமாகவே இந்தப் படம் நன்றாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிரேட் மார்க் இருப்பதுபோல, எனக்கு இருக்கும் நக்கல் திரையிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதோடு வில்லத்தனம் கலந்து வந்தால் இனி கொள்கையை தளர்த்தி வில்லனாக நடிக்கலாம் என்று நினைக்கிறேன். என் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட பி. வாசு, பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன் என எல்லா இயக்குநர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்” என்றார்.
தலையில் முடி இல்லாதது ப்ளஸ்தான் – சத்யராஜ்